ஆரவ் என் நண்பர், அவ்ளோதான்! -ஓவியா பளிச்!


இர.அகிலன்
readers@kamadenu.in


எல்லா நதிகளும் கடலில் சேர்வதைப் போல, பெரும்பாலான கேரளத்து தேவதைகள் வந்து சேரும் இடம் தமிழ் சினிமாவாகவே இருக்கிறது. “ஹாய் அகில்! அஞ்சு நிமிஷம். மேக்கப் போட்டவுடனே போட்டோஸ் வெச்சுக்கலாம்” என்று ஹஸ்கி வாய்ஸில் சொல்லிவிட்டுச் செல்கிறார் ஓவியா. சரியாக ஒரு மணி நேரம் கழித்து அத்தனை ஃப்ரெஷ்ஷாக வெளியே வருகிறார். பூந்தமல்லியில் இருக்கிற கோகுலம் ஸ்டுடியோஸ். கலர்ஸ் தமிழ் சேனலுக்கான டான்ஸ் ஷோ நிகழ்ச்சி.

என்ன திரும்பவும் சின்னத்திரைலயே பிஸியா இருக்கீங்க?

படங்கள்ல நடிச்சிருந்தாலும் சின்னத்திரைதான் என்னைத் தமிழ்நாட்டுக்கு அடையாளம் காட்டுச்சு. நடிப்பைத் தாண்டி, தமிழ்நாட்டுக்கும் எனக்கும் ஒரு அன்பு இருக்குன்னு உணர வெச்சதும் சின்னத்திரைதான். ஸோ.. எவ்வளவு பிஸியா நான் நடிச்சிக்கிட்டிருந்தாலும், சேனல் நிகழ்ச்சின்னு எந்த வாய்ப்பு வந்தாலும் என்னோட சாய்ஸ் எப்பவுமே யெஸ்தான்.
நடிப்புதான் என்னோட கனவு. அம்மாவுடைய ஆசைக்காக திருச்சூர் விமலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முடிச்சேன். என் ரசிகர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. எத்தனை பெரிய ஹீரோயினானாலும், விளம்பரங்களில் நடிக்கறதையும், நேரம் கிடைக்கிறப்போ சேனலில் வருவதையும் நான் விட்டுவிட விரும்பவில்லை என்று சொல்லும் ஓவியாவுக்கு ‘ஓவியாவ விட்டா யாரு?’, `சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’, `காஞ்சனா 3’, `90 மி.லி’ என்று கை நிறைய படங்கள்.

என்ன சொல்றாங்க ‘ஓவியா ஆர்மி’?

(சிரிக்கிறார்) அது ஒரு மித். இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகமானதுன்னு நல்லாவே உணர்ந்திருக்கேன். ஆனா, ரசிகர்களின் அந்த அன்பு நிஜம். சின்ன வயசுலயிருந்தே எனக்குப் பிடிச்சதைச் செய்கிற சுதந்திரம் இருந்தது. அதனால பெருசா எதைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை. இந்த வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதுன்னு நினைச்சு அந்தந்த நிமிஷங்கள்ல வாழ்க்கையோட பரவசத்தை அனுபவிப்பவள் நான்.

‘களவாணி’க்கு அப்புறமாவே நிறைய கிளாமர் ரோல் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களே?

ஆபாசம் ஆடைகளில் இல்லைன்னு நினைக்கறேன். நாம அதை அணிகிற விதத்துல தானே இருக்கு. அந்தக் கதைக்கு தேவைப்பட்டா கிளாமர் ரோல் பண்ணலாம். ‘களவாணி’யில ஸ்கூல் பொண்ணா நடிச்சிருந்தேன். அந்தக் கதைக்கு கிளாமர் தேவைப்படலை.

ஆரவ் உடனான காதல் எந்த அளவில்..?

ஹலோ... முடிவே பண்ணிட்டீங்களா? ஆரவ் என்னுடைய நண்பர். நாங்கள் ஒன்றாக வெளியில் காபி ஷாப், பீச்னு சுற்றுவதைப் பார்த்துவிட்டு அப்படிச் செய்தி பரவிவிட்டது. நண்பர்களோட வெளியே போகவே மாட்டோமா? இப்போ ஆரவ் என்னுடைய நெருங்கிய நண்பர். அவ்வளவுதான்.

x