தப்பை மறைக்க தப்பு... வளருது பெரிய வம்பு! -இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேட்டி


நா.இரமேஷ்குமார்
rameshkumar.n@thehindutamil.co.in

இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தை சாலிகிராமத்தில் இருக்கிற அவரது அலுவலகத்தில் கஜாவுக்குப் பிறகு வந்த ஒரு மழை நாளில் சந்தித்தேன். மேஜையின் மீது, கை நிறைய சில்லறைகளை வைத்துக்கொண்டு சிரிக்கிற குபேர பொம்மைக்குப் பின்னால், பெரிய சைஸ் வெங்கடாஜலபதியும் பண குவியலைக் கொட்டி ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார்.

பிரபுதேவா - நிக்கி கல்ராணி ஜோடி நடிப்பில் கருவாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் -2’ பட ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இருந்த ஷக்தி சிதம்பரத்துடன் மழைக்கு இதமான லெமன் டீயுடன் பேச்சு ஆரம்பமாகியது.

நிறைய படங்கள் பண்ணிட்டீங்க... ஆனாலும் இன்னமும் அதே காமெடிப் படங்கள்... வேற டிராக் மாறும் ஐடியா கிடையாதா?

இயல்பாகவே எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். சின்ன வயசிலிருந்தே காமெடிப் படங்களைத்தான் ரொம்ப விரும்பி பார்ப்பேன். அதனால என் படங்கள்ல எப்பவுமே காமெடிக்கு முக்கியத்துவம் அதிகமா இருக்கும். அதுதான் எனக்கு சரியா வரும். என் படங்கள் எப்பவுமே இப்படித்தான் இருக்கும். என்னால பாலா மாதிரி படம் பண்ண முடியாது. எனக்கு அது மாதிரியான படங்களைப் பண்ணவும் தெரியாது. அதுக்காக அவங்களைத் தப்பா சொல்லலை. அந்த மாதிரியான கதைகளை நான் எடுத்தாலும், என்னை அறியாமலேயே அதுலயும் காமெடியை வெச்சுடுவேன். ரொம்ப அழுகாச்சி, மருத்துவமனைன்னு எல்லாம் என் படங்கள்ல அதிகமா வராது. என் படங்களைப் பார்க்க வரும் ரசிகர்கள் அந்த ரெண்டு, மூணு மணி நேரம் ஜாலியா இருக்கணும்னு நினைக்கறேன். சில காமெடிப் படங்கள்ல ஸ்கிரீன்ல இருக்கிறவங்க மட்டுமே சிரிச்சுக்கிட்டிருப்பாங்க. தியேட்டர்ல இருக்கிறவங்க அவ்வளவு அமைதியா இருப்பாங்க. செல்லுலாய்டுல சிரிக்க வைக்கிறதுக்கும் திறமை வேணும்.

x