திமிரு புடிச்சவன் - திரை விமர்சனம்


‘போலீஸ்லாம் வெத்து...ரவுடிதான் கெத்து’ என்னும் போதையை இளம் சிறார்களிடம் தூவி, அவர்கள் மூலம் குற்றச் செயல்களை அரங்கேற்றும் வில்லனுக்கும், அவனது மாஸை காலி செய்து, ‘போலீஸ்தான் கெத்து’ என நிரூபிக்கும் நேர்மையான இன்ஸ்பெக்டருக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தமே ‘திமிரு புடிச்சவன்.’

விஜய் ஆண்டனிக்குக் கம்பீரமான, கனிவான போலீஸ் அதிகாரி வேடம். கூடவே பாசமிக்க அண்ணன் கதாபாத்திரத்தையும் சிறப்பாகச் செய்திருக்கிறார். மன அழுத்தம் காரணமாக அடிக்கடி ரத்த அழுத்தம் குறைவதும், உயர்வதுமான நடிப்பில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். படத்தின் டைட்டிலை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமே இல்லாமல் சில இடங்களில் திமிர் புடிச்சவனாக நடித்திருப்பது ஒட்டவில்லை.

சிரிப்பு போலீஸாக நாயகி நிவேதா பெத்துராஜ். அவர் செய்கிற சேட்டைகள் ரசிக்க வைக்கின்றன. படத்தில் காமெடி டிராக் இல்லாத குறையை அவரே போக்குகிறார். கனவுக்காட்சியிலும், முத்தக்காட்சியிலும் கிறங்கடிக்கிறார். நாயகனுக்குக் காதலிக்க நேரமில்லாததால், படத்தில் நிவேதாவுக்கு அதற்கு மேல் வேலையில்லாமல் போய்விட்டது.

திருநங்கை இந்துஜா பாத்திரம் நச்! “ஆணாக இருக்குற ஒருத்தரு, பெண் உணர்வு வந்தததும் பூ, பொட்டு வைச்சுட்டு வாழுறதுக்கே தைரியம் வேணும். அதனால்தான் தைரியத்துக்கு திருநங்கைகளை நினைச்சுக்குவேன்” என விஜய் ஆண்டனி பேசும் இடம் கவிதை! பாலியல் தொழிலாளி குறித்த வசனத்திலும் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் கணேஷா.

x