அமிதாப்பும் ஆமீர்கானும் ஒரே ஃப்ரேமில்..!- மகிழ்ச்சிக் கடலில் மனுஷ் நந்தன்


நா.இரமேஷ்குமார்

முதல் முறையாக ஆமிர்கானும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்திருக்கும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷத்தில் இருக்கிறார் ஞாநி சங்கரனின் மகன் மனுஷ் நந்தன். அவரிடம், “மனுஷ்.. கொஞ்சம் பேசணுமே” என்றேன். பத்து நிமிட அவகாசம் வாங்கிக் கொண்டு அவரே லைனில் வந்தார். மனுஷுடன் எனது பேட்டி தொடங்கியது.

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' வாய்ப்பு எப்படி அமைந்தது?

பொதுவாவே மும்பைல தென்னிந்திய டெக்னீஷியன்களுக்கு பெரிய மரியாதை இருக்கு. ரவி.கே.சந்திரன், சந்தோஷ்சிவன், நட்ராஜ், மணிகண்டன்னு நம்முடைய முன்னத்தி ஏர்கள் எல்லோருமே அவங்களுடைய வேலையால் மும்பையில் அவ்வளவு நல்ல பேர் வாங்கி வெச்சிருக்காங்க. அதனால தென்னிந்தியாவுல இருந்து இங்கே வர்ற டெக்னீஷியன்களைத் தனியா கொண்டாடுவாங்க. நான் ரவி.கே.சந்திரன் சார்கிட்ட உதவியாளரா ஆரம்பத்திலிருந்தே மும்பையில் வேலை பார்த்ததால, ஒளிப்பதிவாளரா ஆகும்போதே இங்கேயிருந்து வேலைப் பார்க்கணும்னுதான் விருப்பப்பட்டேன்.
நம்மளோட ஒரு படம், நம்மளை அடுத்த படத்துக்குக் கொண்டு போகும்னு சொல்வாங்க. இதுக்கு முன்னாடி பார்த்த வேலையோ, அல்லது கூட வேலை பார்த்தவங்களோ, அடுத்த படத்துக்கு நம்முடைய பெயரைச் சொல்வாங்க. அப்படித்தான் ஒவ்வொரு பட வாய்ப்பும். நான் வேற ஒரு படத்துல வேலை பார்த்தப்ப இருந்த உதவி இயக்குநர் சொல்லித்தான் இயக்குநர் ஃபராக்கான் கூப்பிட்டு ‘ஹேப்பி நியூ இயர்’ பட வாய்ப்பைக் கொடுத்தார்.
ஷாரூக்கானை வைத்து ‘ஹேப்பி நியூ இயர்’ மாதிரியான ஒரு பெரிய படம் பண்ணதைப் பார்த்துட்டுதான், ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' பட வாய்ப்புக் கிடைச்சுது. ஒரேயொரு பெரிய படம் தான் பண்ணியிருந்தேன். ஆனாலும் நம்பிக்கை வெச்சாங்க.

x