சர்கார் - திரை விமர்சனம்


ஆண்டுக்கு 1800 கோடி சம்பளம் வாங்கும் வெளிநாட்டு கம்பெனியின் சி.இ.ஓ, தன் வாக்குரிமையை நிறைவேற்ற கடல் கடந்து தமிழகம் வருகிறார். சர்வதேசப் புகழ்வாய்ந்த அவரது வாக்கையே கள்ள ஓட்டாகப் போட்டிருப்பது கண்டு, அரசியல்வாதிகளுக்கு எதிராக நாயகன் சுழற்றும் சாட்டையும், அதனால் ஏற்படும் அரசியல் மாற்றமுமே ‘சர்கார்.’

வருண் என்கிற ராஜேந்திரனிடமிருந்து கடன் வாங்கிய மூலக் கதையில், ‘உங்க ஊரில் தலைவனைத் தேடுங்கள்’ என்னும் அடிநாதத்தை வைத்து, மாஸ் காட்சிகளுக்கே கூடுதலாக மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். ‘சிகரெட் காட்சிகள் இனி என் படத்தில் இருக்காது' என்று சொல்லியிருந்த விஜய், ஓப்பனிங் காட்சியிலேயே சிகரெட்டுடன் உயர் ரக காரிலிருந்து இறங்குகிறார். கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து துவம்சம் செய்வது, மூத்த அரசியல் தலைவராக வரும் பழ.கருப்பையாவின் கூட்ட மேடையில் அவர் அருகில் போய் அமர்ந்து கோரிக்கை கடிதம் கொடுப்பது எல்லாம் பக்கா சினிமா!

ஸ்டைலாக நடித்திருக்கிறார் விஜய். வசன உச்சரிப்பு, நடனம், ஆக் ஷன் என்று தன் ரசிகர்களுக்கு விருந்தே படைத்திருக்கிறார். ‘கத்தி’, ‘தலைவா’ படங்களின் மேனரிஸங்களைப் பொருத்தமான இடத்தில் வெளிக்காட்டி அப்ளாஸ் அள்ளுகிறார். வழக்கமாக குழந்தைகளுக்கும் விஜய் படம் பிடிக்கும். இது முழுக்கவே அரசியல் படம் என்பதால், குழந்தைகளுக்கு ஏமாற்றமே. பிற்பாதியில் உரக்கக் கத்துவதும், பேசியே புரட்சியை ஏற்படுத்துவதும் நெருடல்.

அடுக்கடுக்காக விஜய் பேசும் வசனங்களையும் தாண்டி தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது கார் டிரைவரின் வசனம். “எங்களுக்குப் பிரச்சினைக்குத் தீர்வு எல்லாம் தேவை இல்லை...இன்னொரு பிரச்சினைதான் தேவை. எல்லாத்தையும் ஃபேஸ்புக், வாட்ஸ் - அப்ல ஃபார்வேர்ட்தான் பண்ணுவோம்” என அவர் சொல்லும்போது உறைக்கிற நிதர்சனம் கன்னத்தில் அறைகிறது.

x