கா.இசக்கி முத்து
“என்னாச்சு? கிரிக்கெட் விளையாண்டோம்... நீ தான அடிச்ச? பால் மேல போச்சு” என்பதை சினிமா ரசிகர்களின் எவர்கிரீன் வசனமாக்கி சிரிக்க வைத்தவர் பாலாஜி தரணிதரன். தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குநரான இவர், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்குப் பிறகு ‘சீதக்காதி’யில் களமிறங்கியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு தாத்தா கெட்-அப் கொடுத்து, படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருப்பவருடன் ‘காமதேனு’ இதழுக்காகப் பேசியதிலிருந்து...
‘சீதக்காதி’ தலைப்புக்கு என்ன அர்த்தம்? எப்படி விஜய் சேதுபதி உள்ளே வந்தார்?
‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்றொரு பழமொழி இருக்கிறதே, அதிலிருந்துதான் இந்தத் தலைப்பை எடுத்தேன். ஏன் இந்தத் தலைப்பு என்பது படம் பார்க்கும்போது புரியும். 2013-ம் ஆண்டிலேயே இக்கதையை எழுதிவிட்டாலும், தொடர்ந்து அப்டேட் பண்ணிக்கிட்டே வந்தேன். நிஜத்தில் 75 வயது நிரம்பிய ஒருவரை நடிக்க வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தேட ஆரம்பித்தேன். ஆனால், புதுமுகம் வேண்டாம், படத்தின் பட்ஜெட் தாங்காது என்ற பல காரணங்களைச் சொன்னார்கள். இப்படியே 6-7 மாதங்கள் போய்விட்டன. ஒரு கட்டத்தில் இப்படியே போனால் தொடங்க முடியாது என்று தெரிந்துவிட்டதால் வேறு வேலையில் இறங்கினேன். இந்த நேரத்தில்தான் ஃபேஷன் ஸ்டிடுயோஸ் நிறுவனத்திடமிருந்து கதை கேட்டார்கள். ‘சீதக்காதி’ கதையைச் சொன்னேன். பண்ணலாமே என்றார்கள்.