அன்றும்  இன்றும்  என்றும் இளையராஜா!


வெ.சந்திரமோகன்

இரவு, மழை, ஜன்னலோரம்... # இளையராஜா – சமூக வலைதளங்களில் தினமும் குறைந்தபட்சம் ஒருவராவது இப்படி நிலைத்தகவல் எழுதுவதைப் பார்க்கிறோம். பயணங்களில் மட்டுமல்ல, பலரது வாழ்க்கையின் முக்கியத் தருணங்களில் ராஜாவின் இசை ஒரு வழித்துணையாகவே மாறியிருப்பதற்கான சாட்சியம் அது. இளையராஜாவின் பாடலைப் பாடி காதலை வெளிப்படுத்தியவர்கள், குழந்தைகளைத் தூங்கவைத்தவர்கள், தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

இதோ, யானையை உறங்க வைக்க முயற்சி செய்யும் பாகன், இளையராஜா இசையமைத்த மலையாளப் பாடலைப் பாடுகிறார். கண்மூடிக் கிறங்கவைக்கும் தாலாட்டில் மயங்கி உறங்குகிறது களிறு. மின்சார வேலியில் அடிபட்டு இறந்த குட்டியின் நினைவால் மதம் பிடித்துத் திரிந்த யானை ‘கேளடி கண்மணி’ படத்தின் ‘கற்பூர பொம்மை ஒன்று’ பாடலைக் கேட்டு அமைதியானதாகக் குறிப்பிடுகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். பல பரிமாணங்கள் கொண்ட இசையின் வழியே இளையராஜா நிகழ்த்திய அற்புதங்களின் பட்டியல் மிகப் பெரியது.

ஏன் இந்த மனிதர் நமக்கு இத்தனை நெருக்கமானவராக இருக்கிறார்? ஏன் இவரது இசையைக் கேட்கும்போதெல்லாம் சொல்லவொணா உணர்வுப் பின்னல்களுக்குள் சிக்குண்டுவிடுகிறோம்? பல்வேறு மொழிகளில் இளையராஜா இசையமைத்த பாடல்களை, பின்னணி இசைக் கோவைகளைக் கேட்பவர்களால் ஒரு விஷயத்தை உணர்ந்திருக்க முடியும். திரைப்படங்களின் தன்மைக்கேற்ற பாடல் காட்சிகளுக்கென அவர் உருவாக்கும் இசை, திரைக்கு வெளியே, கால எல்லைகளைக் கடந்து ஒரு உணர்வுக் கடத்தியாக நம்மை வந்தடைந்திருக்கிறது என்பதுதான் அது.

x