புது வீட்டில் தீபாவளிப் பொண்ணு!


கா.இசக்கி முத்து

திருவான்மியூர் தாண்டி, வண்டியை ஒரு அழுத்து அழுத்தினால் ஐந்தாவது கிலோமீட்டரில் நீலாங்கரை. இங்கே தமிழ் சினிமாவின் ‘தளபதி’ விஜய் வீட்டுக்கு முந்திய தெருவில் உயரமாய் வளர்ந்து நிற்கும் அந்த அபார்ட்மென்ட்டின் மூன்றாவது மாடியில் வசிக்கிறார் கீர்த்தி சுரேஷ். லிஃப்ட் ஏறி காலிங் பெல் அழுத்தினால், ‘வெல்கம் ட்ரிங்க்’ தந்து நம்மை வரவேற்கிறார்.

பிரம்மாண்டமாய் நீள்கிற வரவேற்பறையில் தொந்தி சரிய ஆசிர்வதிக்கிறார் வல்லப விநாயகர். கீர்த்தியின் இஷ்ட தெய்வமாம். ஃபேஷன் டிசைனிங் படிப்பும், அனுபவமும் வீடு முழுக்க கீர்த்தியின் பளிச் ஐடியாக்களால் மின்னுகிறது. ‘சர்கார்’ ரிலீஸில் இந்த தீபாவளி கீர்த்தி சுரேஷுக்கு சரவெடிதான்.
 
“புது வீடு... அடுத்தடுத்து மெகா ஹிட் படங்கள்... அடுத்து கல்யாணம்தானா..?” என்றால் சிரிக்கிறார்.

‘‘எப்பவுமே இந்தக் கேள்வியை கடைசியிலதானே கேட்பாங்க... ஆரம்பத்துலேயே கேட்கறீங்க? சினிமாவில் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, ஆசை ஆசையாய் வாங்கிய வீடு. இதை வெறும் கட்டிடமா மட்டும் பார்க்காம ஒவ்வொரு உறவுகளோட இணைச்சு காலாகாலத்துக்கும் நினைவுகள்லேயும் இந்த வீட்டைச் சுமக்கணும்னு நினைக்கறேன். இன்னும் வளரணும். பேர் சொல்ற மாதிரியான படங்கள்ல இப்போதான் நடிச்சுக்கிட்டு வர்றேன்’’ என அடக்கம் பேசுகிறார் கீர்த்தி.

x