’நடிக்க முடியாவிட்டால் இயக்குநராவேன்'- மனம் திறக்கிறார் ‘ராட்சசன்’ அமலாபால்


கா.இசக்கி முத்து

‘ராட்சசன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் அமலாபால். பூரிப்பில் குண்டாவதுதானே வழக்கம்? அமலாபாலோ மெலிந்துபோய் இருக்கிறார். “அடுத்தடுத்து தமிழ், இந்திப் படங்களில் நடிப்பதற்காகத்தான் இந்த எடைக் குறைப்பு” என்று சிரித்த அவரிடம் இமயமலை பயணம், அடுத்தடுத்த படங்கள் என்று பேசுவதற்கு நிறைய இருக்கின்றன. ‘காமதேனு’ இதழுக்காக அவரிடம் பேசியதிலிருந்து..

உடல் நலமில்லாத நேரத்திலும், கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப் போனதை நிறைய பேர் பாராட்டினார்களே?

‘அதோ அந்த பறவை போல' படப்பிடிப்பின் போது கை உடைந்துவிட்டது. கேரளாவில் வெள்ளப் பாதிப்பு என்றவுடன் என்னால் சென்னையில் இருக்க முடியவில்லை. உடனே கிளம்பிவிட்டேன். நான் பண்ணியதெல்லாம் சாதாரணம். பலர் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். அவர்களுடைய முகம் எல்லாம் வெளியே தெரியவில்லை. நான் நடிகை என்பதால் செய்தியாகிவிட்டது. என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். எனது அப்பாவுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. ஒருநாள் சரியான நேரத்துக்குச் சாப்பிடவில்லை என்றாலும் பெரிய பிரச்சினையாகிவிடும். என் அப்பா வயதுக்காரர்கள் எத்தனை பேர், பச்சிளம் குழந்தைகள் எத்தனை பேர் அங்கே பசியால் வாடியிருப்பார்கள்? இப்போது அவர்கள் வெள்ளப்பாதிப்பில் இருந்து மீண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

x