கா.இசக்கி முத்து
ஆகச்சிறந்த படங்களை மட்டுமே பார்ப்பேன் என்று அடம் பிடிக்கிற சினிமா ரசிகர்களையும்கூட எதிர்பார்க்க வைத்திருக்கிறது ‘சூப்பர் டீலக்ஸ்’ படம். காரணம், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. எடுத்த எடுப்பிலேயே தனது‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம், உலக சினிமாவை மட்டுமே புகழும் விமர்சகர்களையும் அடடே போட வைத்தவர். ‘ஷில்பா’ விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் எனப் பெரும் படையோடு ’சூப்பர் டீலக்ஸ்’ஸில் களமிறங்கியிருக்கும் அவரை ‘காமதேனு’ இதழுக்காகச் சந்தித்தேன். வெளியில் இருக்கும் எதிர்பார்ப்புகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் ரொம்ப யதார்த்தமாகப் பேசினார்.
முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் இவ்வளவு இடைவெளி ஏன்?
என்னிடமிருந்த ஒரு கதைக்கு திரைக்கதை எழுத முயன்றேன். அது முடியவில்லை. பிறகு, இன்னொரு கதையை எழுதினேன். அதைத் தொடங்குவதற்குள் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டதால் அதுவும் முடியாமல் போனது. எதுவுமே வேண்டாம், சின்னதா ஒரு படம் பண்ணலாம் என்று தொடங்கியதுதான் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதைத் தொடங்கியும் 2 வருடங்களாகிவிட்டன. கூடவே, நிறைய நடிகர்களும் உள்ளே வர சின்னப் படம், பெரிய படமாக மாறிடுச்சு.