ராட்சசன் - திரை விமர்சனம்


பதின் பருவத்து பள்ளி மாணவிகளை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கில்லருக்கும், அவனை அடையாளம் கண்டு கைது செய்யத் துடிக்கும் துடுக்கான போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் சடுகுடு ஆட்டம் தான் ‘ராட்சசன்’.

‘முண்டாசுப்பட்டி’யில் கலகலப்பு காட்டிய இயக்குநர் ராம்குமார், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு திகில் அனுபவத்தை ராட்சசனில் படரவிட்டுள்ளார். ஆனாலும் முன்பகுதியில் அக்கா மகளுக்கு பிராக்ரஸ் கார்டில் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு விஷ்ணு விஷால், அமலாபாலிடம் செய்யும் அலப்பறை காட்சிகள் சிரிப்பு வெடி.

சைக்கோ சப்ஜெக்ட்டில் திரைப்படம் எடுக்கும் இயக்குநர் கனவோடு பயணிக்கும் விஷ்ணு விஷாலுக்கு, அவரது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவர் பார்த்த போலீஸ் வேலை கிடைக்கிறது. பிடிக்காமல் பணிக்கு வந்தவருக்கு சைக்கோ கொலைகாரன் கேஸ் உந்துதலாக அதன் பின்னால் பயணிக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு கனகச்சிதமாக பொருந்திப் போகிறார். கோபம், மகிழ்ச்சி எனத் தன் பங்களிப்பை உணர்ந்து நிறைவான நடிப்பையும் வழங்கியுள்ளார்.

சொல்லிக்கொள்ளும்படி பெரிய வேலை இல்லாவிட்டாலும், காட்டன் புடவை கட்டி, ஸ்கூல் டீச்சராக வந்து போகிறார் அமலா பால். ராதாரவி, காளி வெங்கட் ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நிறைவான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

x