விருப்பமே இல்லாமல் முதல்வர் பதவியை ஏற்க நேரிடும் ஒரு இளைஞன், அந்தப் பதவிக்கு ஆபத்து வரும்போது, தனது திறமையான காய் நகர்த்தல்களால் அதை எப்படித் தக்க வைத்துக்கொள்கிறான் என்பதுதான் நோட்டா படத்தின் கதை.
ஷான் கருப்புசாமி எழுதிய ‘வெட்டாட்டம்’ என்ற அரசியல் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் படம்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகன் முதல்வர் ஆகும் கதையில் சென்னை வெள்ளம், முதல்வர் கோமாவில் இருப்பது, முதல்வர் கைதாவதால் நிகழும் வன்முறை, கூவத்தூர் கூத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு என சமகால விவகாரங்களைச் சேர்த்து கலகலப்பூட்டியிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் கடல்கடந்து பதுக்கி வைத்திருக்கும் ஊழல் பணம், அதைக் கைப்பற்றத் துடிக்கும் ஆன்மிக போலிகளின் தொடர்பு, ஊழல் பணத்தை மீட்பதற்கான நாயகனின் மறைமுகப் போராட்டம் எனத் திரைக்கதையில் நுழைக்கப்பட்ட துணை இழை, படத்துக்கு பளபளப்பான த்ரில்லர் பூச்சையும் கொடுத்துவிடுகிறது.