திராவிட சினிமாவுக்கு காவியச் சுவை தந்தவர்!


நாற்பதுகளின் தமிழ் சினிமா, தனக்குத் தேவையான கதைகளைப் புகழ்பெற்ற தெருக்கூத்து நாடகங்கள், புராணங்கள் ஆகியவற்றில் இருந்து எடுத்துக்கொண்டது. இதிலிருந்து சற்று மாறுபட்டு, ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தந்த தாக்கத்தால் கதைகளை எழுதி, அதில் கொஞ்சம் திராவிட அரசியல் கருத்துகளையும் சேர்த்து திரைப்படங்களாகக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.

தமிழ் சினிமாவைப் பாடல்களின் பிடியிலிருந்து மீட்க எல்லீஸ் ஆர்.டங்கன் முயன்றதுபோல, கூர்மையான வசனங்களை உயர்த்திப்பிடித்துப் பாடல்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயன்ற துணிச்சல்காரர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியத்தை (ஹானர்ஸ்) விரும்பிப் பயின்றவர். ஆங்கில நாடகங்களின் பிதாமகன், வில்லியம் ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்களையும் தனது கல்லூரிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே கற்றுத் தேர்ந்தவர். அதன் தொடர்ச்சியாக ஆங்கில இலக்கியத்தை விரும்பி வாசித்தவர். இவரது ஆங்கில இலக்கியப் புலமையைக் கண்ட அறிஞர் அண்ணா, தனது ‘வேலைக்காரி’ நாடகத்தை ஜுபிடர் பிக்சர்ஸ் படமாக்க முன்வந்தபோது, அதை ஏ.எஸ்.ஏ.சாமியே இயக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். தவிர, தனது வசனங்களில் தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளவும் சாமிக்கு சுதந்திரமளித்தார் என்றால் ஒரு தேர்ந்த வசனகர்த்தாவாக இவரின் திறமை நமக்குப் புரிந்துவிடும்.
கலைஞரின் திரைக்கதை ஆசான்!

ஷேக்ஸ்பியரது நாடகங்களின் முக்கிய கலையம்சமாக இருப்பது அரசியல் சதி மற்றும் துன்பியல் நகைச்சுவை. இவை இரண்டையும் தனது திரைக்கதைகளுக்குள் சாமி எடுத்தாண்டிருக்கிறார். அதன் விளைவாக,கற்பனைக் காவியமோ, சமூகக் கதையோ இவர் எழுதிய திரைக்கதைகள் எதுவாயினும் அவற்றில் காவியச்சுவையும் ஊடாடவேண்டும் என்ற முனைப்பு, கதாபாத்திரங்களை வலுவாக வடிவமைப்பதில் வெளிப்பட்டது. கதாபாத்திர வார்ப்பில் சாமி காட்டிய இந்த அக்கறை, அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியது.

அதேபோல், வசனங்கள் ரசிகர்களின் மனங்களில் அழுந்தப் பதியவேண்டும் என்பதில் தீவிரம் காட்டியவர் சாமி. இவரிடம் உதவியாளராக இருந்துதான் திரைக்கதை, வசனம் எழுதும் கலையைக் கற்றுக்கொண்டார் கலைஞர் மு.கருணாநிதி. இதைக் கருணாநிதியே கூறியிருக்கிறார். கலைஞரின் 50 ஆண்டு கலையுலக வாழ்வின் நிறைவை, நடிகர் விஜயகாந்த் தலைமையில் கடந்த 1996-ல் திரையுலகம் கொண்டாடியது. மெரினாவில் நடந்த அந்த விழாவில் கலந்துகொண்ட கலைஞர், “திரைப்படத்துக்குக் கதை, வசனம் எழுத, அண்ணன் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் தான் நான் கற்றுத் தேர்ந்தேன்” என்றார். தனது திரைக்கதை ஆசானை கவுரவிக்கும்பொருட்டு அரசுத் திரைப்படக் கல்லூரியின் திரைக்கதை, இயக்கம் பயிற்றுவிக்கும் துறைக்கு சாமியை பேராசிரியராகவும் பணியில் அமர்த்தி அழகு பார்த்தார் கலைஞர்.

x