மகாராஷ்டிரம் மாநிலத்தின் ஒரு குக்கிராமம். மழை பெய்து சில வருடங்களாவது இருக்கும். வறண்ட நிலத்தில், வியர்வை வழிய உழுது கொண்டிருக்கிறான் அந்த ஏழை விவசாயி. பெயர் சிவா. அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் பிரீத்தி. இளையவள் சோனியா. நாம் இப்போது பேசப்போவது சோனியாவைப் பற்றி மட்டுமே!
விவசாயம் என்றால் இன்றைய காலகட்டத்தில் ‘கடன்’ என்றுதான் பொருள். சிவாவுக்கும் கடன் தேவைப்படுகிறது. எனவே, அந்த ஊரின் கந்துவட்டிக்காரர் பல்தேவ் சிங்கிடம் கடன் கேட்கிறான். அவனுக்கு இரண்டு மகள்கள் இருப்பதை அறிந்திருக்கும் பல்தேவ், தன்னிடம் இருவரில் ஒருத்தியை விற்றுவிடும்படி கேட்கிறான். வறுமை பீடித்த சிவாவால் என்ன செய்ய முடியும்? பிரீத்தி விற்கப்படுகிறாள்.
நகமும் சதையுமாக இருந்தவர்கள் பிரீத்தியும் சோனியாவும். நகம் பிய்ந்துபோனால், சதை படும் பாட்டை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். பிரீத்தி எங்கு, எப்படி, யாரிடம் இருக்கிறாள் என்பதைத் தேடிக் கண்டுபிடிக்க, சோனியா மும்பைக்குப் போகிறாள். பிரீத்தி மும்பையில் இருப்பதாகத்தான் அவளுக்குச் சொல்லப்பட்டது.
மும்பையில் கால் வைக்கும்போது, இனி தன் வாழ்வு இருளப் போகிறது என்பது சோனியாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால், அவள் வந்த இடம் சிவப்பு விளக்குப் பகுதி. சதையை விற்கும் வணிகத்தைச் செய்து வரும் பல்தேவின் மனைவி அஞ்சலியால் மும்பைக்குக் கொண்டு வரப்படுகிறாள் சோனியா.
மங்கிய ஒளியும், தூசு படிந்த சுவர்களும், மோகத்தின் உச்சத்தில் முனகுகிற ஆண்களும், வலியில் துடிக்கிற பெண்களுமென அந்த மாளிகை அவளுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் அளிக்கிறது. ஆனால் பிரீத்தி அங்குதான் இருக்கிறாளா? அல்லது ‘இருக்கிறாளா?’