யூ- டர்ன் : திரை விமர்சனம்


மேம்பாலத்தில் சாலை விதிகளை புறந்தள்ளி, தடுப்புக் கற்களை அகற்றி, குறுக்கே ‘யு- டர்ன்’ எடுப்பவர்கள் பலர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அது ஏன் என்பதை திகில் விலகாமல் நகர்த்துவதே ‘யு-டர்ன்’!

படத்தின் மையப்புள்ளி சமந்தா தான். ராகுல் ரவீந்திரனிடம் காதலை வெளிப்படுத்த காத்திருக்கும் தருணம், அடுத்தடுத்து நடக்கும் மர்ம மரணங்களை பார்த்து அலறுவது, ஆதியோடு சேர்ந்து மரணங்களின் பின்னணியைக் கண்டுபிடிக்க அலைவது என ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
    
குடும்பம், குடும்பத்தின் சண்டை, காவல்துறை, காவல் அதிகாரிகளின் டென்ஷன், பத்திரிகை துறை, அங்கே பணிபுரிபவர்களின் சிந்தனை, சாலைகள், சாலை விதிமீறல்கள், அந்த விதிமீறல்களால் யாருக்கோ நடக்கும் விபத்துகள், அந்த விபத்துகளால் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்பதையெல்லாம் ஒரு சினிமாவாகக் கடத்தியிருப்பதுதான் படத்தின் சிறப்பு அம்சம்.

சர்ப்ரைஸ், சஸ்பென்ஸ், த்ரில்லர், ஹாரர் எனக் கலந்து கட்டினாலும் குழப்பமே இல்லாத திரைக்கதையால், கதையை மெல்ல நகர்த்தியிருக்கும் விதம்தான் ‘யு-டர்ன்’ படத்தின் முதல் ப்ளஸ். இயக்குநர் பவன்குமாரின் அசாத்திய உழைப்பும் நேர்த்தியும் படம் முழுக்கவே விரவியிருக்கிறது.

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் இன்டெர்னாக சேரும் சமந்தா பொறியியல் படித்தவர். வீட்டில் திருமணத்துக்கு நெருக்கடி, அவருக்கோ இதழியலில் சாதிக்க ஆர்வம். ஏதாவது வித்தியாசமான செய்தி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ‘யு-டர்ன்’ ஸ்டோரிக்கு பிளான் செய்வது, அதற்காக க்ரைம் நிருபரிடம் உதவி கேட்பது, சாலையோர பிச்சைக்காரரிடம் தகவல் பெறுவது எனக் காட்சியமைப்புகள் யதார்த்தம்.

x