சீமராஜா - திரைவிமர்சனம்


ஜமீன் பரம்பரையில் 33-வது அரச வாரிசாக வருகிறார் ‘சீமராஜா’ சிவகார்த்திகேயன். ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின்போது அரசால் பிடுங்கப்பட இருந்த நிலங்களை, அதில் குத்தகை விவசாயம் செய்துவந்த விவசாயிகளுக்கே கொடுத்துவிட்ட குடும்பம் இவருடையது. காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்காக இப்போது அந்த நிலங்களை அபகரிக்க வருகிறார் வடநாட்டுத் தொழில் அதிபர் ஒருவர். அதற்குத் துணைபோகிறார் புளியம்பட்டியில் வசிக்கும், சிங்கம்பட்டியின் எதிரியான ‘காத்தாடி’ கண்ணன்(லால்). சீமராஜா இதை எப்படி முறியடிக்கிறார் என்பது கதை.

சிவகார்த்திகேயன் – இயக்குநர் பொன்ராம் கூட்டணி பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இணையாக, நில உரிமை, விவசாயம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் படத்தைத் தந்திருக்கிறார்கள்.

தன்னை வாழ்த்துபவர்களுக்கு பணத்தை அள்ளி இறைத்துவிட்டு, பழம்பெருமையுடன் குதிரை வண்டியில் ஊரை வலம்வந்து, உடற்கல்வி ஆசிரியர் சமந்தாவின் காதலைப்பெற அவரைத் துரத்தி திரியும் பொறுப்பில்லாத ஜமீன் வாரிசாக முதல்பாதியில் வருகிறார் சிவகார்த்திகேயன். இதற்கு நேர்மாறாக இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ் பேக் காட்சியில் மக்களையும் மண்ணையும் காக்கும் கடம்பவேல் ராஜாவாக வந்து ஆச்சரியப்படுத்துகிறார். திருத்தமான தமிழ் உச்சரிப்பு, கம்பீரமான நடிப்பு என ஃபிளாஷ் பேக்கில் சிவகார்த்திகேயனின் உழைப்பு சிறப்பு.

பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஃபிளாஷ் பேக் பகுதி இரண்டாம் பாதிப் படத்தை தூக்கி நிறுத்திவிடுகிறது. ‘மாவீரன்’ (மகதீரா), ‘பாகுபலி’ பாதிப்பில் அந்தக் காட்சிகளை உருவாக்கியதில் தப்பில்லை. ஆனால், காட்சிகளையும், ஆடை வடிவமைப்பையும் கூட அப்படியே காப்பியடித்திருப்பது நெருடுகிறது.

x