அழகாக காட்டுவது மட்டுமே ஒளிப்பதிவு அல்ல..!- வெற்றி ரகசியம் சொல்லும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்


எந்தவொரு கதைக்களமாக இருந்தாலும் அதில் தன்னை நிரூபித்துக் காட்டியவர் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். ‘சில்லுனு ஒரு காதல்’, ‘கஜினி (இந்தி)’, ‘காக்க காக்க’, ‘பீமா’, ‘இருமுகன்’ தொடங்கி சமீபத்தில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ வரை தனது கேமிரா கண்களால் படங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர். காதல், காமெடி, ஆக் ஷன் என்று எந்தப் படமாக இருந்தாலும், அதற்கேற்ப பட்டையைக் கிளப்பும் ராஜசேகரை ‘காமதேனு’ இதழுக்காக சந்தித்தேன்.

“ரொம்ப சந்தோஷமான மனநிலையில் இருக்கும்போது வந்திருக்கீங்க. ‘இமைக்கா நொடிகள்’ படத்துக்காக பலரும் பாராட்டிக்கிட்டு இருக்காங்க. அதில் வரும் சைக்கிள் சண்டைக் காட்சி, அனுராக் கஷ்யப் சாருடைய காட்சிகளுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டோமோ, அதற்கெல்லாம் மருந்தாக இந்தப் பாராட்டுகள் அமைஞ்சிடுச்சி. ஒரு படத்தைப் பார்த்திட்டு, கேமிராமேனை பேட்டி எடுக்க வந்துருக்கீங்கன்னு நினைக்கும்போதே இன்னும் உற்சாகமா இருக்கு. கேளுங்க.. சொல்றேன்” என்று பேட்டிக்குத் தயாரானார் ஆர்.டி.ராஜசேகர். 

எப்படித் தொடங்கியது உங்களது ஒளிப்பதிவு பயணம்?

நான் ராஜீவ் மேனன் சார்கிட்ட ‘மின்சார கனவு’ பண்ணிக்கிட்டு இருக்கும்போது, அவருக்கு உதவி இயக்குநரா கௌதம் மேனன் வந்து சேர்ந்தார். அப்பத்தான் எனக்கும் கௌதம் சாருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுச்சு. அந்தப் படம் முடியும் போதே, “ஒரு கதை வச்சுருக்கேன்... கேட்குறீயா” என்று கௌதம் கேட்டார். அந்தக் கதையைக் கேட்டுவிட்டு, எனக்கு தோன்றிய சில மாற்றங்களைச் சொன்னேன். “நீங்களே ஒளிப்பதிவு பண்ணுங்களேன்” என்றார். அதுவரைக்கும் ஒரு படத்துக்குத் தனியாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமோ, திட்டமோ இல்லை. அவர் கேட்டதும் ஓகே சொல்லி, ‘மின்னலே’ படத்தில் பணிபுரிந்தேன். அந்த வகையில் கௌதம் சாரை மறக்க முடியாது. நானும் பேர் சொல்ற மாதிரி படங்கள் பண்ணியிருக்கேன்னு நம்புறேன்.

x