கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்


ஏழைக்குடும்பத்தில் புற்றுநோய் பாதித்த அம்மாவை தன் மகள் காப்பாற்றினாரா, இல்லையா என்பதே ‘கோலமாவு கோகிலா’

ஏழைக் குடும்பத்தின் பணப் பிரச்சினையை, இயலாமையை, துணிச்சலை மிகக் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். கொஞ்சம் பிசகினாலும் தடம் மாறிவிடக் கூடிய திரைக்கதைக்கு நகைச்சுவை மூலம் வலு சேர்த்திருக்கிறார்.

வேலைக்குச் செல்லும் பெண், பொறுப்பான மகள், பிரச்சினைக்கு வில்லங்கமாகத் தீர்வு காணும் தைரியம் என்று வியக்க வைக்கிறார் நயன்தாரா. மொத்தப் படமும் அவரைச் சுற்றியே பயணிக்கிறது. “அவனையும் சுட்டாத்தான் நான் போவேன்” என்று அவர் சொல்கையில் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. அதிக மேக்கப் இல்லாமல், சீருடை போல ஒரே மாதிரியான காஸ்ட்யூமில், துளி கவர்ச்சியோ, காதலோ இல்லாமல் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். இக்கட்டான சூழலில் தன் குடும்பத்தைக் காப்பாற்ற எடுத்துவைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் செயலிலும் நயன் தடம் பதிக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன் நோயாளிக்குரிய அறிகுறிகளுடன், பாவப்பட்ட அம்மாவாக அடக்கி வாசித்திருக்கிறார். அந்த மெட்டோடர் வேனில் படுத்த படுக்கையாக போலீஸுக்குப் போக்கு காட்டும் அவரது நடிப்பு அலப்பறை. பொறுப்புள்ள அப்பாவாகவும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று வருத்த வடுக்களைச் சுமந்து திரிபவராகவும் ஆர்.எஸ்.சிவாஜி பக்குவமான நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

x