ஜுங்கா- திரை விமர்சனம்


பரம்பரை சொத்தை மீட்பதையே லட்சியமாகக் கொண்ட ஒரு கஞ்சத்தனமான டான் (விஜய் சேதுபதி), அச்சொத்தை மீட்கப் பணத்தைத் தயார் செய்து கொடுக்கிறார். ஆனால், சொத்தைக் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் டான் சவால் விடுகிறார். அந்தச் சவால் என்ன, சொத்து யாருக்குச் சென்றது, டானின் காதல் என்ன ஆனது என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் சுற்றிவளைத்துப் பதில் சொல்கிறது ‘ஜுங்கா’.

ஒண்ணாம் நம்பர் கஞ்சனாக விஜய் சேதுபதி. ரவுடித்தனம் என்ற பெயரில் செய்கிற அத்தனையும் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன. பஸ் கண்டக்டர், டானுக்கான தோற்றம், தாத்தா பெயர் ரங்கா, அப்பா பெயர் லிங்கா, டான் பாடும் பாடல் என ரஜினி ரெஃபரன்ஸ் படத்தில் அதிகம். ஆனால், விஜய் சேதுபதியின் கெட்டப் எடுபடவில்லை.  

தமிழ்ப்படம் பாணியில், நிறைய படங்களையும், நடிகர்களையும் ஸ்பூஃப் செய்திருக்கிறார்கள். சினிமாவை மட்டுமல்ல, அரசியலையும் ‘ஓட்டி’யிருக்கிறார்கள். புதிய இந்தியா, வெள்ளைச்சட்டைக்காரனின் ஏமாற்றுத்தனம் என்று நிறைய. அதுவும் அந்த 10 லட்ச ரூபாய் கோர்ட்டும், அதை வாங்கிவிட்டு கஞ்ச டான் பேசுகிற வசனமும் செம.

தெலுங்கு பேசும் அழகுப் பெண்ணாக மடோனா சிரிக்க வைக்கிறார். தான் டான் ஆகிவிட்டதால், காதல் கைகூடாமல் போய்விடுமோ என்று கவலைப்படும் விஜய்சேதுபதியிடம், பிரச்சினைக்கு மடோனா சீரியஸாகச் சொல்லும் (காமெடித்)தீர்வு அசத்தல். 

x