சர்க்கஸ் பாதி, காதல் மீதி கலந்து செய்த கலவை!- 'மெஹந்தி சர்க்கஸ்' இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேட்டி


“விலங்குகளை வைத்தல்ல... முழுக்க முழுக்க மனிதர்களையும் அவர்களின் மனங்களையும் வைத்து நடத்தும் சாகசங்கள்தான் மெஹந்தி சர்க்கஸ். எப்படி படத்தோட ஒன்லைனை ஈஸியா சொல்லிட்டேனா?” என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் இயக்குநர் சரவண ராஜேந்திரன்.
‘ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜுமுருகனின் அண்ணன்தான் சரவண ராஜேந்திரன். திரையுலகம் என்ற சர்க்கஸ் கூடாரத்திற்குள் ஏற்கெனவே நுழைந்துவிட்டாலும், ‘மெஹந்தி சர்க்கஸ்’ மூலம் கவனம் ஈர்த்திருப்பவரை ‘காமதேனு’ இதழுக்காகச் சந்தித்தேன்.

மெஹந்தி சர்க்கஸ்’ பற்றி கொஞ்சம் விரிவாகப் பேசலாமா?

ஒரு எமோஷனான காதல் கதைதான் ‘மெஹந்தி சர்க்கஸ்’. 1990-களில் வட இந்தியா, கேரளா மாநிலங்களிலிருந்து சர்க்கஸ் போடுவதற்கென்றே நிறைய பேர் தமிழ்நாட்டுப் பக்கம் வருவாங்க. இப்போது நகரங்களில் நடப்பது மாதிரி பிரம்மாண்ட சர்க்கஸாக இல்லாமல், ரொம்பச் சின்னதா இருக்கும். அந்தக் குழுவில் அதிகபட்சமாக 20 - 40 பேர் வரை இருப்பாங்க. திருச்சி, தஞ்சாவூர் என ஒவ்வொரு ஊராக டேரா போட்டுக்கிட்டே வருவாங்க. அப்படி சர்க்கஸ் போட கொடைக்கானலுக்கு வருது ஒரு குரூப். அதில் இருக்கிற பெண்ணுக்கும், கொடைக்கானலில் பாட்டு கேசட் பதிவு பண்ணிக் கொடுக்கும் கடை வச்சிருக்கிற பையனுக்கும் இடையேயான காதல்தான் முழுப்படமும். 1993-ல் கதை தொடங்கும்; க்ளைமாக்ஸ் 2010-ல் முடியும்.

சர்க்கஸ் என்றவுடன் நம் மனதிற்குள் சில பிரம்மாண்டமான விஷயங்கள் தோன்றுமல்லவா? அப்படி எதுவுமே இல்லாத நிஜமான, யதார்த்தமான சர்க்கஸைத்தான் படத்தில் காட்டியிருக்கிறேன். அத்து டன் சினிமாவுக்குத் தேவையான விஷயத்தையும் சேர்த்திருக்கேன். படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு பாட்டின் மான்டேஜில் மட்டும் யானை வந்துட்டுப் போகும். அதைத்தான் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டோம். சர்க்கஸ் பற்றிய படம் என்றவுடன், ஆவணப்படமாக இருக்குமோ என்று நினைத்துவிடாதீர்கள். படத்தின் ஜீவனே காதல்தான்.

x