ஜீ தமிழ் சேனலில் 28 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் - சீசன் 2’ இரண்டே மாதங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பாடகர்கள் சுஜாதா, கார்த்திக், ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து வாரா வாரம் போட்டியாளர்களுக்கு வைக்கும் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் சுட்டீஸ்களில் குட்டிப் பையன் கமலேஷ் தனிக் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சென்னையைச் சேர்ந்த கமலேஷைத் தேடிப்பிடித்து, “கண்ணா கமலேஷ் ஒரு பேட்டி...” என்றால், “ஓ… தாரளமா பேசலாமே...” என அப்பா ஜெகனின் கைகளைப் பற்றிக்கொண்டே கொஞ்சும் மழலையில் பேசத் தொடங்கினார்.
‘‘டிவியில என்னைப் பார்த்துட்டு ஸ்கூல்ல என்னோட ஃப்ரெண்ட்ஸுங்க எல்லாரும் என்கூட நின்னு செல்ஃபி எடுத்துக்கிறாங்க. இப்போ ரொம்பவே ஹேப்பியா இருக்கேன். மேடையில எப்டி பாடணும்னு அம்மா சொல்லிக்கொடுப்பாங்க. பாட்டோட சேர்ந்து டான்ஸும் ஆட அப்பா கத்துக்கொடுக்கிறாரு. ‘எப்படியாவது டைடில் வின் பண்ணணும்பா...’னு அப்பாக்கிட்ட கேட்பேன். அதுக்கு அவர், ‘இப்பவே நீ பிரபலம் ஆகிட்டே. அதெல்லாம் விடுடா...’ன்னு சொல்றாரு. அப்படிச் சொல்லும்போதெல்லாம் ‘இல்லை… இல்லை நான்தான் வாங்குவேன்’னு அவரைச் செல்லமா ஓங்கி அடிப்பேன். ரீசன்டா ஒரு காலேஜ் ஃபங்ஷன்ல நயன்தாரா மேமும், அனிருத் அங்கிளும் வந்தாங்க. நான் பாடுறதைப் பார்த்துட்டு கைத்தட்டிப் பாராட்டினாங்க. எனக்கு கபாலி அங்கிள்னா (ரஜினி) ரொம்பப் பிடிக்கும். சீக்கிரமே அவரோட பாராட்டையும் வாங்கணும்’’ என்று கமலேஷ் பேசிக் கொண்டே போக...
``கமலேஷுக்கு இசை மீது எப்படி ஆர்வம் வந்தது?'’ என்று அவரது அப்பா ஜெகனிடம் கேட்டேன்.