குத்துச்சண்டை வீரர் ராகவ் (கவுதம் கார்த்திக்). அவரது தந்தை சந்திரமௌலி (கார்த்திக்). அப்பாவும் மகனும் ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். கார்த்திக் அதில் பலியாக, நிலைகுலைந்துபோகும் கவுதம் கார்த்திக், 2 அடி தூரம் மட்டுமே பார்க்க முடியும் என்ற பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார். இந்தச் சவாலான சூழலில் எப்படிக் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கிறார் என்பதே ‘MR சந்திரமௌலி’
அப்பா- மகன் இணைந்து நடித்திருப்பது எவ்வித மேஜிக்கையும் நிகழ்த்தாமல் சாதாரணமாகவே கடந்து போகிறது. தந்தை - மகன் இருவருக்கும் இடையிலான அன்னியோன்யமான அன்பைச் சொல்வதற்கே நிறைய காட்சிகளைச் செலவிட்டுவிட்டார் இயக்குநர். இதனால் முதல் பாதி கொஞ்சம் இழுவையாகப் போகிறது.
தேர்வறையில் மைக்ரோபோன், ப்ளூடூத் மூலம் காப்பி அடித்த ஓர் ஐபிஎஸ் அதிகாரியின் செயலை நினைவுகூர்ந்து அதை திரைக்கதைக்கான முக்கியத் திருப்பமாக மாற்றியதில் சபாஷ் பெறுகிறார் இயக்குநர் திரு.
முழுமையான ஹீரோவாக மாறியிருக்கிறார் கவுதம் கார்த்திக். நடன அசைவுகளில் கவனிக்கவைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளும் நம்பும்படி இருக்கின்றன.