ஒரு குப்பை கதை- விமர்சனம்


கூவம் கரையோரம் வசிக்கும், மாநகராட்சி குப்பை அள்ளும் தொழிலாளி மாஸ்டர் தினேஷ். அவருக்குப் பொய் சொல்ல விருப்பம் இல்லாவிட்டாலும் அவர் ‘கிளர்க்’ வேலை பார்க்கிறார் என்று சொல்லி வால்பாறையில் இருக்கும் மனிஷா யாதவைத் திருமணம் செய்துவைக்கிறார்கள். கணவனுக்குக் கவுரமான வேலை, புதிய வாழ்க்கை என்று கனவுகளுடன் சென்னைக்கு வருகிறார் மனிஷா. உண்மை தெரியும்போது என்னவெல்லாம் ஆகிறது?

ஓர் இளம் பெண்ணின் விருப்பு, வெறுப்புகள் மட்டுமின்றி சமூக, கலாச்சார, பொருளாதாரச் சூழல்கள் ஒருவரை எந்தளவுக்கு சமூக வரையறைகளை மீற வைக்கிறது என்பதை யதார்த்தமாகச் சொல்லியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி.

கூவம் கரையோரத்து எளிய மனிதர்களின் வாழ்விடப் பிரச்சினைகள், கனவுகள், சிரமங்கள் என அவர்களின் வாழ்க்கையைப் பரிதாபத்துக்குரிய தொனியில் காட்டாமல், இயல்பு மாறாமல் அதன் அழகியலுடன் காட்சிப்படுத்தியிருப்பது பலம்.

‘தவறிழைப்பது மனித இயல்பு’ என்று படத்தின் டைட்டில் கார்டு போட்டு, ‘மன்னிப்பது மகத்தானது’ என்கிற அர்த்தத்தில் முடித்திருப்பது கதைக்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது.

x