இசைஞானியும் கவிப்பேரரசும் கைகோக்க வேண்டும்!- கண்ணே கலைமானே’ இயக்குநர் சீனு ராமசாமி!


‘மக்கள் விரும்புவதை எல்லாம் செய்பவன் கலைஞன் அல்ல. மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் விரும்புகிற மாதிரி கொடுப்பவன்தான் கலைஞன். இயக்குநராக ஏறக்குறைய 11 ஆண்டுகால ஓட்டம். ஒவ்வொரு படத்துக்கும் 2 வருட காத்திருப்பு. சில நேரம் அதுவே ஒரு தவம் போலவும், எதிர்க்காற்றில் சைக்கிள் மிதித்துப் பயணிப்பது போலவும் ஆகிறது. இதுதான் என் பாதை, பயணம் என்று தீர்மானித்து இப்போது 6 - வது படைப்பாக இந்த ‘கண்ணே கலைமானே’ கதையைத் தொட்டிருக்கிறேன்” என நிதானமாகப் பேசத் தொடங்குகிறார், தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி.

தனது ஒவ்வொரு படைப்பிலும் சமூகப் பொறுப்புள்ள விஷயத்தைப் பிரதிபலிக்கச் செய்யும் சீனு ராமசாமி இப்போது உதயநிதி - தமன்னா நடிப்பில் ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஒருவகையில், இதுவும் சமூகப் பொறுப்புள்ள ஒரு படம்தான். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்திவரும் அவர் ‘காமதேனு’ இதழுக்காக அளித்த ஃபர்ஸ்ட் லுக் பேட்டியிலிருந்து...

‘கண்ணே கலைமானே’ திரைக்கதை வழியே என்ன சொல்ல வருகிறீர்கள்?

மனித மனங்களில் குரூரம் அதிகமாக இருக்கும் காலகட்டமாக இன்றைய காலகட்டத்தைப் பார்க்கிறேன். ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைச் சாப்பிட்டு மனித மனமும் துரிதமானதாக ஆகிவிட்டது. உறவுகளின் மீது நம்பிக்கை குறைந்து போனது. இந்த நேரத்தில் அன்பை, மனித நேயத்தை விதைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு படைப்பாளியாக, இரண்டு மகள்களைப் பெற்ற தகப்பனாக உறவுகளின் உன்னதத்தைச் சொல்ல விரும்புகிறேன். அதுதான் இந்த ‘கண்ணே கலைமானே’.

x