காளி - விமர்சனம்


தனக்கு வருவது கனவா, நிஜமா என்பது தெரியாமல் தவிக்கும் விஜய் ஆண்டனி, அதற்கான விடை தேடி புறப்படும் பயணமே காளி.

அமெரிக்காவில் மிகப் பெரிய மருத்துவமனையை நிர்வகிக்கிறார் விஜய் ஆண்டனி. திடீரென்று தன் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, சிறுநீரகக் கோளாறு என்பதை அறிந்து தன் சிறுநீரகத்தைத் தர முன்வருகிறார். அப்போதுதான் தான் அவர்கள் மகன் இல்லை என்பது தெரியவருகிறது. அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு, தன் உண்மையான பெற்றோரைத் தேடி இந்தியா வருகிறார். அங்கு என்ன நடக்கிறது, தன் பெற்றோரைக் கண்டுபிடித்தாரா என்பது மீதிக் கதை.

படத்தில் விஜய் ஆண்டனிக்கு நான்கு வேடங்கள். அமெரிக்காவின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவராகவும், கிராமத்துத் திருடனாகவும் கச்சிதமாகப் பொருந்துகிறார். கூடவே, 1980-களில் வாழும் கிறிஸ்தவ பாதிரியார், அதே காலகட்டத்தில் படித்த கல்லூரி மாணவர் என்றும் வெரைட்டி காட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

சொந்தப் பெற்றோரைத் தேடும் இளைஞனின் நோக்கத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி சரியாகப் பதிவு செய்திருக்கிறார். ஆனாலும், அதில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் சேர்த்திருக்கலாம். சாதியின் தீ நாக்குகள் தரும் விளைவுகள், தீண்டாமையின் கொடூரம், பாதிரியாரின் பாவ மன்னிப்பு என சரியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

x