மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் 2 - வுக்குத் தயாராகிவிட்டார். ஜூன் இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் ஷோவின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அதற்கான பிரம்மாண்ட கண் கவர் அரங்கு சென்னை – பெங்களூரு சாலை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தயாராகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டி, மாதிரி கிராமசபைத் திட்டம் என்று பரபரப்பான அரசியல் பங்களிப்புகளுக்கு மத்தியில், பிக் பாஸ் 2 வுக்கான ப்ரமோ புகைப்படங்கள் மற்றும் விஷுவல் காட்சிகளின் படப்பிடிப்பைக் கடந்த வாரத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறார் கமல்!
‘கமல்ஹாசனைத் தவிர, இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களில் பிரபலங்கள் யாரும் பெரிதாக இல்லையே?’ என்ற கேள்வி ‘பிக் பாஸ் முதல் பாகம் தொடங்கும் போது இருந்தது. ஆனாலும், அந்தத் தொடர் சூடு பிடிக்கத் தொடங்கியதும் அது பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. என்றாலும் இம்முறை நட்சத்திரப் போட்டியாளர்கள் தேர்வில் இன்னும் மெனக்கெட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது பிக் பாஸ் குழு.
எகிறும் டிஆர்பி, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு மிக்க நிகழ்ச்சி என்பதால், பொழுதுபோக்கின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தின் ஆழமான கருத்துகளை எடுத்துவைக்கும் களமாகவும் இந்த மேடையைப் பயன்படுத்திக்கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் ‘பிக் பாஸ்’ கமல்.
“நமக்கு நம்ம ஊருதான் செல்லம்!” - தெலுங்கு தேசத்தைக் கலக்கும் நளினி