அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்!


10 வருடங்கள், 18 படங்கள், 20-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ வெளியாகிவிட்டது. இதுவரை வந்த ‘மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ வில்லன்களில் மிக முக்கிய வில்லனான தானோஸ் தான் படத்தின் மையப் புள்ளி.

பேரண்டம் படைக்கப்பட்டபோது உருவான ஆறு முடிவிலா கற்கள் பற்றி இதற்கு முந்தைய மார்வெல் படங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். தோரின் விண்கலத்தை தானோஸ் தனது படைகளுடன் தாக்குவதோடு, ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ படம் தொடங்குகிறது. விண்கலத்தில் இருந்த மக்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். அதோடு, லோகி வசம் இருக்கும் பவர் ஸ்டோனையும் தானோஸ் கைப்பற்றுகிறான். இந்தத் தாக்குதலில் பூமிக்கு வீசப்படும் ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் இடத்தில் போய் விழுகிறான்.

ப்ரூஸின் மூலம் தானோஸ் பற்றியும் அவனது திட்டத்தையும் அறிந்து கொள்ளும் ஸ்ட்ரேஞ்ச் தன்னிடம் இருக்கும் டைம் ஸ்டோனைப் பாதுகாக்கும் பொருட்டு அயர்ன் மேனை உதவிக்கு அழைக்கிறான். இதைத் தொடர்ந்து,டைம் ஸ்டோனைக் கைப்பற்ற மிகப்பெரிய விண்கலம் ஒன்றில் தனது படையை அனுப்பி வைக்கிறான் தானோஸ். அப்போது நடக்கும் சண்டையில் ஸ்பைடர்மேனும் இணைந்துகொள்ள ஹல்க்கைத் தவிர மற்ற மூவரும் விண்கலத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

இன்னொரு பக்கம் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ குழுவால் மீட்கப்படும் தோர், தானோஸைத் தடுக்க அவர்களோடு சேர்ந்து திட்டம் தீட்டுகிறான். தனித்து விடப்பட்ட ஹல்க், இன்னொரு அவெஞ்சரான ’விஷன்’ நெற்றியில் இருக்கும் மைண்ட் ஸ்டோனைக் காப்பாற்ற கேப்டன் அமெரிக்காவைத் தொடர்பு கொள்கிறான். இந்த மூன்று குழுவும் ஒன்று சேர்ந்தார்களா? தானோஸ், கற்களைக் கைப்பற்றினானா? அவெஞ்சர்களால் தானோஸைத் தடுக்க முடிந்ததா என்பதுதான் கதை. (ஸாரி பாஸ்... இந்த மாதிரி படத்தையெல்லாம் வெறிகொண்டு பார்க்காத ரகம் நீங்கள் என்றால்... இதுவரை சொன்னது கொஞ்சம் தலைசுற்றத்தான் செய்யும்!)

x