“ஏரியா முழுக்க இப்போ செம ரெஸ்பான்ஸ்ல...”- ‘சிறுவாணி சின்னமணி’ பிரியங்காவின் பெருமிதம்!


“ஏனுங்க... பேட்டி எடுக்க வந்திருக்கீகளா..? எங்க ஊரு கோயம்புத்தூர் பாஷையோட பெருமை தெரியுங்களா..?” - இப்படித்தான் கொங்குத் தமிழில் கொஞ்சிப் பேசி கலகலப்பு கூட்டுகிறார், கோயம்புத்தூர் 93.5 சூரியன் எஃப்.எம். ‘சிறுவாணி சின்னமணி’ ஷோ, ஆர்.ஜேயான பிரியங்கா!

‘‘பத்தாவது வரை உடுமலைப்பேட்டை பக்கத்துல இருக்குற என்னோட ஜல்லிப்பட்டி கிராமத்துலதான் படிச்சேன். அடுத்து கோயம்புத்தூர்ல மேல்நிலை, கல்லூரி படிப்பு நகர்ந்தது. பத்தாவது படிக்கும்போது, ‘நல்ல மார்க் வாங்கினா, பேப்பர்ல போட்டோ வரும்!’னு அம்மா சொன்னாங்க. நல்லாப் படிக்கவும் இல்லை; நல்ல மார்க்கும் வாங்க முடியலை. அடுத்து ப்ளஸ் டூ போகும்போதும், ‘இப்பவாச்சும் அதிக மார்க் வாங்கினா, பேப்பர்ல போட்டோ வருமே..?’ன்னு ஆர்வத்தைத் தூண்டுனாங்க. அப்பவும் அவங்க ஆசையை நிறைவேத்த முடியாமப் போச்சு. ஆனா, எப்படியாச்சும் அம்மா பெருமைப்படுற மாதிரி எதையாச்சும் சாதிக்கணும்னு உள் மனசுக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு.

ஸ்கூல் படிக்கிறப்பவே அனிமேஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஆர்வத்துலதான் காலேஜ்ல விஸ்காம் எடுத்தேன். அந்த எனர்ஜியோட சூரியன் எஃப்.எம் உள்ளயே வந்துட்டேன். இப்போ, அம்மாவுக்கு ரயில் பெட்டி நீளத்துக்கு சந்தோஷம். எனக்கும் கடந்த ஆறேழு வருஷமா வீட்ல பாக்கெட் மணிகூட வாங்காம நம்மை நாமே பார்த்துக்கிறோம்கிற பெருமையும் உண்டு’’ என்கிறார் பிரியங்கா.

‘சிறுவாணி சின்னமணி’ ஷோ கொங்கு  மண்டலத்துல படு ஹிட்டாமே..?’’ என்று கேட்டால், ‘‘சூரியன் எஃப்.எம்-மில் சேர்ந்து 4 வருஷம் ஓடிருச்சு. ஆரம்பத்துல ‘கிசு கிசு கீதா’, ‘காதல் காதல்’ நிகழ்ச்சிகளைக் கையில் எடுத்திருந்தேன். அதுலயும் ‘காதல் காதல்’ ஷோ எனக்கு எக்கச்சக்க ரசிகர்களைக் கொடுத்துச்சு. கல்லூரி ஸ்டூடன்ஸ் எல்லோரும் என்னைப் பார்க்க ஆபீஸுக்கே வந்துடுவாங்க. மேரேஜ்னா இன்வைட் பண்ணிட்டு எதிர்பார்ப்பாங்க. அடுத்து, ‘சினிமா சிரிப்பு பாட்டு’ன்னு ஒரு நிகழ்ச்சி. இப்போ, ‘சிறுவாணி சின்னமணி’. கொங்கு மண்ணின் பாஷை, மக்கள் மத்தியில் அது ஏற்படுத்துற வைப்ரேஷன்... இதையெல் லாம் உணர்த்துற ஷோ. பொள்ளாச்சி, திருப்பூர்னு ஏரியா முழுக்க இப்போ செம ரெஸ்பான்ஸ்ல...’’ என ப்ரியங்களுடன் விடை கொடுக்கிறார் பிரியங்கா.

x