கார்த்திக் சுப்புராஜின் துணிச்சலான முயற்சி மெர்க்குரி. மௌனப்படம், த்ரில்லர் என்ற இரு வகைகளையும் ஒன்றாகக் கொடுக்க முயன்றிருக்கும் படம்! பார்வையாளர்களின் நேரத்தை மதித்து 2 மணி நேரத்துக்குள் முடிந்துவிடுகிற படம்!
ஒளி அசைவை மட்டுமே உணரக்கூடிய ஐவரை, ஒலி அதிர்வை மட்டுமே உணர்கிற ‘ஒருவர்’ வேட்டையாடும் கதை.
‘பன்ச்’ வசனம் பேசிக் கைதட்டல் வாங்குகிற தமிழ் சினிமாக்களுக்கு மத்தியில், வசனமின்றி ரசிகர்களை தியேட்டருக்குள் உட்கார வைக்க அசாத்திய நடிப்புத்திறன் வேண்டும். அது பிரபுதேவாவிடம் இருக்கிறது. காதுகேளாத, வாய்பேச முடியாத பெண்ணாக உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகி இந்துஜா. சனந்த் ரெட்டி நமக்கு ஏற்கெனவே டிமான்ட்டி காலனியில் அறிமுகமானவர். மற்ற மூன்று புதுமுக இளைஞர்களும் (தீபக் பரமேஷ், சஷாங் புருஷோத்தம், அனீஷ் பத்மநாபன்) நல்ல தேர்வு.
துக்கடா கேரக்டர்தான் என்றாலும், காது கேட்காதவர் களின் மத்தியில் மாட்டிக்கொண்டு விழிக்கும் காது கேட்கும் பெரியவர் கதாபாத்திரத்தில் கஜராஜ் (கார்த்திக் சுப்புராஜின் தந்தை) அசத்தியிருக்கிறார். அவர் மியூசிக் பிளேயரில் வால்யூமை ஜீரோவாக வைத்துவிட்டுப் போக, அது தெரியாமல் ஆடிக்கொண்டிருந்துவிட்டு, அதைக் கண்டுபிடித்த பிறகு, அந்த இளைஞர்கள் கோபப்படும் காட்சி நயமான நகைச்சுவை.