மகேஷ்பாபுக்கு மறுவாழ்வு!


ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபு கூட்டணியில் வெளியான ‘ஸ்பைடர்’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதற்கு முந்தைய ‘பிரம்மோத்சவம்’ படுதோல்வி. இவற்றை மறக்கடிக்க ஒரு வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார் டோலிவுட்டின் இளவரசர் மகேஷ்பாபு. இந்தச் சூழலில் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவான ‘பரத் அனே நேனு’ படத்தில் நடிக்கத் தொடங்கினார். சிவா - மகேஷ்பாபு கூட்டணியின் முந்தைய படம் ‘ஸ்ரீமந்துடு’ பெரிய வெற்றிபெற்றது.

இந்த நிலையில், `பரத் அனே நேனு’ படத்தில் ஆந்திர முதல்வராக மகேஷ் நடிப்பதாகத் தெரியவந்ததும் எதிர்பார்ப்பு எகிறியது. ஏப்ரல் 20-ல், வெளியான ‘பரத் அனே நேனு’ விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை அள்ளியது. `மன பிரின்ஸ்கி இன்கொக்க பிளாக்பஸ்டர் ரா...’ என்று சமூக வலைதளங்களில் மகேஷ்பாபு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றவரான பரத் ராம், தனது தந்தையின் மரணத்துக்குப் பின் திடீரென்று அரசியலுக்குள் தள்ளப்பட்டு ஆந்திர முதல்வராகவும் ஆகிறார். பதவியில் அமர்ந்ததும் மாநிலத்தின் அனைத்துத் துறைகளையும் சீர்திருத்துகிறார். கதைச் சுருக்கத்தை வைத்து ‘லீடர்’, ‘முதல்வன்’ போன்ற பல அரசியல் படங்களின் சாயல் இருக்கிறதே என்று தோன்றலாம். ஆனால், `இயக்குநர் கொரடல சிவா, தனது திரைக்கதையில் பல சுவாரஸ்யமான மாற்றங்களைப் புகுத்தி அதகளம் செய்திருக்கிறார்’ என்று பாராட்டுகிறார்கள் படம் பார்த்தவர்கள்.

ஸ்டைலிஷ் முதல்வராக வரும் மகேஷ்பாபு, சட்டசபை காட்சிகள், க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் பத்திரிகையாளர் சந்திப்பு, தியேட்டர் சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார். கொரட்டலா சிவாவின் வசனங்களும் இந்தப் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் நிற்கிறது.

x