ஹாலிவுட் கிராபிக்ஸின் தமிழ் பிரம்மா!


பிரம்மாண்டமான கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக நம்மூர் சினிமா இயக்குநர்கள் வெளிநாடுகளுக்குப் பறந்துகொண்டிருக்க, ஹாலிவுட்காரர்களுக்கே சென்னையில் இருந்து கிராஃபிக்ஸ் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறது ‘ஃபேன்டம் எஃப்.எக்ஸ்’ நிறுவனம்!

அந்த அலுவலகம் அமைந்துள்ள அம்பத்தூரின் பிரம்மாண்டமான ‘இந்தியாபுல்ஸ் பார்க்’ கட்டிடத்திற்குள் நுழைய பல கெடுபிடிகள். டவர் பி 6-வது மாடியில் அமைந்திருக்கும் ‘ஃபேன்டம் எஃப்.எக்ஸ்’ நிறுவனத்திற்குள் நுழைந்தால், ஆச்சரியம்! அலுவலகத்திற்கு பக்கத்திலேயே 8 பேர் அமர்ந்து ஜாலியாக கேரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். போன் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பின், சி.இ.ஓ பிஜாய்யை பார்க்க அனுமதித்தார்கள்.

சந்திப்பதற்கு முன் அவரைப்பற்றி சில வரிகள். ‘தி பர்ஃபெக்ட் வெப்பன்’, ‘தி லிட்டில் மெர்மெய்டு’, ‘அண்டர்வேர்ல்டு: ப்ளட் வார்ஸ்’, ‘கோஸ்ட் பஸ்டர்ஸ்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு கிராஃபிக்ஸ் பணிகள் செய்துகொடுத்திருக்கிறது இவருடைய நிறுவனம். தமிழில் ‘இன்று நேற்று நாளை’, ‘மரகத நாணயம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது ‘சீமராஜா’, ‘விஸ்வரூபம் 2’, ‘சிவகார்த்திகேயன் - ரவிக்குமார்’ படம் என்று பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் பிஜாய்.

“2001-ல் விளம்பரங்களுக்கு அனிமேஷன் செய்துகொண்டு இருந்தேன். அந்தத் துறையில் இன்னும் உயரத்தைப் பிடிக்கணும்னு சென்னை வந்தேன். இப்போ இயக்குநரா இருக்கிற கார்த்திக் ராஜு சார் இதே பில்டிங்ல ஒரு கிராஃபிக்ஸ் கம்பெனில வேலை செஞ்சுட்டு இருந்தார். அவர் மூலமாக இங்கே வேலைக்கான இன்டர்வியூல கலந்துக்கிட்டேன். திடீர்னு அந்த கம்பெனியையே மூடிட்டாங்க. எந்த பில்டிங்கைப் பார்த்து, ‘யப்பா வேலை பார்த்தா இங்க பார்க்கணும்’னு பெருமூச்சுவிட்டேனோ அதே பில்டிங்ல இப்ப என்னோட கனவு நிறுவனத்த நடத்திட்டிருக்கேன்” என்று தன் பயணத்தை விவரிக்கத் தொடங்கினார் பிஜாய்.

x