பேசுனா காசுன்னாங்க...டிவிக்கு ஓடி வந்துட்டேன்- ‘காமெடி கில்லாடீஸ்’ கமல் கல.. கல..


“சாதாரணமா தொகுத்து வழங்குற ஒரு நிகழ்ச்சிக்கு இடையில ரெண்டு காமெடி பிட்டுகளை சேர்த்துவிட்டா.. அதுவே ரசனையா மாறிடும். ஆனா, முழு காமெடி நிகழ்ச்சிக்கு இடையில் சின்னதா சொதப்பிட்டாலும் அவ்ளோதான். சின்னத் திரையில் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறது ரொம்பவும் கஷ்டம்’’ என்கிறார், ஜீ தமிழ் ‘காமெடி கில்லாடீஸ்’ வி.ஜே-யான கமல்!

ஜீ தமிழ் சேனலில் ‘காமெடி கில்லாடீஸ்’, ‘கொஞ்சம் காஃபி நிறைய சினிமா’ நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொகுப்பாளர் கமலிடம், அவரது சினிமா நண்பர்கள் ‘சீக்கிரம் சினிமாவுக்கு வாங்க’ன்னு விடாப்பிடியாய் இழுக்கிறார்களாம்.

‘‘நான் இன்னும் ஆங்கராவே என்னை முழுசா நம்பாமல் சுத்திக்கிட்டிருக்கேன். அதுக்குள்ள சினிமாக்கு வாடான்னா எப்படிப் போறது. எப்படி சின்னத்திரை வாசல் அதுவா திறந்ததோ அதே மாதிரி அமையட்டும்னு இருக்கேன்’’ என்று தன்னடக்கம் காட்டும் கமலை விஜய் டி.வி-யின் ‘அழகிய தமிழ் மகன்’ நிகழ்ச்சிதான் சின்னத்திரைக்கு அழைத்து வந்தது.

‘‘அது நடந்து ஏழு, எட்டு வருஷங்கள் இருக்கும். அழகிய தமிழ் மகன் இறுதிச்சுற்று வரைக்கும் வந்தேன். நம்ம சிங்காரச் சென்னைதான் சொந்த ஊர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அப்படியே பீச், ஸ்டேடியம், சினிமான்னு பொழுதுபோக்கா வாழ்க்கை ஓடிக்கிட்டிருந்துச்சு. தீடீர்னு, ‘ஒரு நாள் பேச வர்றீங்களா? காசு கொடுப்போம்’னு ஜீ தமிழ்ல இருந்து கூப்பிட்டாங்க. இதைவிட என்ன வேணும்னு ஆட்டோ பிடிச்சு அப்படியே ஓடி வந்தவன்தான். இப்போ ஜீ தமிழ்ல நமக்கு மூணா வது வருசம் ஓடுது. நான் பேசுற சென்னைத் தமிழ் ஆரம்பத்துல நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறதுக்கு கொஞ்சம் சிக்கலா இருந்துச்சு ஆனா, போகப் போக சரியாகி அதுவே ‘கமல் ஸ்டைல்’னு பெயர் வாங்கிக் குடுத்துருச்சு. இப்போ, சின்னத் திரையில நமக்கு ஒரு பெரிய ஃபேன்ஸ் கூட்டமே வந்தாச்சு. அவங்க எல்லாருமே என் பேச்சுக்கு மயங்கிச் சேர்ந்த கூட்டம்தான்’’ என்று கலகலப்பாக முடிக்கிறார் கமல்.

x