மாற்றங்களின் ஆஸ்கர்


சமீபத்தில் நடந்து முடிந்த 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பல மாற்றங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது. விருதுகளைத் தாண்டி, இது ஆஸ்கருக்கு மட்டுமல்லாது, ஹாலிவுட்டுக்கே மிகவும் முக்கியமான தருணம். அதற்கு ஒற்றைக் காரணம்… தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீன்! தன் விரல் அசைவால் ஹாலிவுட்டை ஆட்டிப்படைத்தவர்.

இன்றைக்கு ஆஸ்கர் விருது இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு, வெய்ன்ஸ்டீன் 80-களிலிருந்து மேற்கொண்ட பிரச்சாரம் மிக முக்கியமான காரணம். ஆஸ்கர் விருது பெறும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என யாராக இருந்தாலும் வெய்ன்ஸ்டீனுக்கு நன்றி தெரிவிக்காமல் இருக்க மாட்டார்கள். இவர் தயாரித்த படங்கள் இதுவரை சுமார் 300 ஆஸ்கர் விருதுகளுக்கு மேல் வென்றிருக்கின்றன. அரசியலிலும் செல்வாக்குப் படைத்தவர் வெய்ன்ஸ்டீன்.

அப்படிப்பட்ட வெய்ன்ஸ்டீனுக்கும் ஒரு பெரிய சறுக்கல், ‘நடிகைகள் மீதான பாலியல் பலாத்காரம்’ என்ற வடிவில் வந்தது. அதுதொடர்பான செய்தி ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. அதில், வெய்ன்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 நடிகைகள் வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள். அதையொட்டி ‘#MeToo’ என்ற பிரச்சாரம் சூடுபிடித்தது. சுமார் 80-க்கும் மேற்பட்ட நடிகைகள், வெய்ன்ஸ்டீனால் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்திருந்தார்கள். வெய்ன்ஸ்டீனின் சாம்ராஜ்யம் ஒரே நாளில் சரிந்தது. இந்த ஆண்டு, ஆஸ்கர் ஏற்புரைகள் எதிலும் ‘வெய்ன்ஸ்டீனுக்கு நன்றி’ என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை!

வெய்ன்ஸ்டீனைப் பற்றி இவ்வளவு விரிவாகச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது… பெண்கள்,திருநங்கைகள், தன்பாலின உறவாளர்கள், மாற்றுத்திறனாளிகள், அகதிகள் என விளிம்புநிலையில் உள்ள மக்களைப் பற்றிச் சொன்ன படைப்புகளையே இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் கொண்டாடியிருக்கின்றன.

x