வணக்கம்…
எங்க வீட்டு தேவதை கீர்த்தனாவுக்கு மார்ச் 8 -ல் திருமணம். நண்பர்களுக்கு அழைப்பிதழ் வைத்துக்கொண்டிருக்கிறேன். அழைப்பிதழில் இடம்பெற்ற ‘பாசம் என்ற ஒற்றையடிப் பாதையிலிருந்து... இனி, இனிதான இல்லறமெனும் பரந்து விரிந்த நெடுஞ்சாலைக்குள்..’ என்ற இடத்தை மட்டும் நிறுத்தி திரும்பவும் பார்த்தார் ரஜினி சார். அவரது கண்கள்... ‘ஒரு பெண் குழந்தைக்குப் பாசம் ஒன்று மட்டுமல்ல. அதையும் கடந்து வாழ்க்கை அவளுக்கு வேறொன்றை அமைக்கிறது’ என்பதைப் போல ஒளிர்ந்தது. நண்பர் சூர்யா அந்த இடத்தைக் கடக்கும்போது கண் கலங்கிவிட்டார்.
திருமணம் பற்றி கீர்த்தனா என்னிடம் சொல்லும்போது, அப்படியே தலை குனிந்தபடியே நின்றேன். அடுத்த சில விநாடிகளில் செல்போனை எடுத்து, கீர்த்தனாவின் அன்புக்குரிய அக்ஷய்க்கு வாட்ஸ்-அப் வழியே, ‘கீர்த்தனா என்கிற தேவதை எப்படி என் வாழ்க்கையை மாற்றி அமைத்தார்’ என்ற ஒரு குறுஞ்செய்தி குரல் பதிவை அனுப்பினேன்.
‘காதல் எனக் கொண்டாடப்பட்ட ஒரு திருமணம், விவாகரத்து நடந்த அன்றோடு என் வாழ்க்கையும் முடிந்துபோனதாக நின்ற நேரத்தில், மகள் கீர்த்தனாதான் மற்றொரு மகள் அபியையும், மகன் ராக்கியையும் கைப்பிடித்து என்னிடம் அழைத்துவந்தார். அந்தளவுக்கு மெச்சூரிட்டியான கீர்த்தனா மகளாக மட்டுமல்ல, எனக்கு அம்மாவாக, என் அம்மாவையும் பார்த்துக்கொண்டவர்.