ஸ்ரீதேவி என்றால் அழகு. ஸ்ரீதேவி என்றால் தேவதை. இப்படிதான் உறைந்துபோயிற்று. யாராவது ஸ்ரீதேவியின் அழகைப் பொருட்படுத்தாமல், அவருடைய நடிப்பைப் பற்றிப் பேசினால், அவர்கள் போலியாகக் கதைக்கிறார்களோ என்ற சந்தேகம் வரும். உண்மைதான். இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார். ‘ஜானி’, ‘மூன்றாம் பிறை’ போன்ற சில படங்களில் அவர் மிக அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அதையெல்லாம் தாண்டிய அழகின் உன்னதம் அவர். பரிபூரண அழகின் காரணமாகவே ஸ்ரீதேவியைப் பலருக்குப் பிடிக்காமல் போவதும் உண்டு. பாலுமகேந்திராகூட ஒரு உரையாடலில் சொன்னார், ‘ஸ்ரீதேவியின் அழகு திகட்டக் கூடியது!’ அவர் சில்க் ஸ்மிதாவின் ஆராதகர். நான் சொன்னேன், ‘பரிபூரணம் எங்கோ ஒரு இடத்தில் தெய்வீகம் ஆகிவிடுகிறது; தெய்வீகம் நம்மைச் செயலற்றவர்களாக்கிவிடுகிறது.’
எது நம் உயிராகிறதோ அதுவே நம் உயிரை உறிஞ்சுவதும் ஆகிறது. ஸ்ரீதேவியுடன் உரையாடிய நாளில் இது புரிந்தது. திருமணத்துக்கு 15 ஆண்டுகள் கழித்து, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ மூலம் மீண்டும் அவர் சினிமாவுக்குள் வந்த சமயம். மூன்று முறை அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அளந்து பேசுகிறவர். மூன்றாவது உரையாடலில் அரிதாக, படத்தைத் தாண்டி நிறையப் பேசினார்.
தன்னுடைய பால்யத்தைப் பறிகொடுத்த வராகவே ஸ்ரீதேவி தெரிந்தார். அந்த வலி உரையாடல் நெடுகிலும் வெளிப்பட்டது. சின்ன வயதில் அம்மா, அப்பாவைத் தாண்டிய ஒரு உலகம் அவருக்கு இருந்திருக்க வில்லை. “அம்மா நடிக்கச் சொல்வார். நடிப்பேன். நடிப்பு எனக்குப் பிடிச்சிடுச்சு. ஆனா, பயந்து பயந்துதான் நடிச்சேன். அந்த பயம் போகவேயில்லை. காலையில ஏழு மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுல இருக்கணும். நாலரை மணிக்கு எழுந்து கிளம்பிரணும். வீடு திரும்ப நடுராத்திரி ஆகும். தூக்கத்துக்காக ஏங்கியிருக்கேன். நண்பர்கள் கிடையாது.