29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார்.
மேஷம் இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அயன சயன போக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
அஸ்வினி: கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பரணி: தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
கார்த்திகை 1ம் பாதம்: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். பணதேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
பரிகாரம்: அறுபடை முருகன் கோவிலில் ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும். “சுப்பிரமணிய புஜங்கம்” பாராயணம் செய்யவும். செவ்வரளி மலரை அம்மனுக்கு படைத்துவர துன்பங்கள் யாவும் நீங்கும்
ரிஷபம் இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் ராசியையும் , ஏழாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்
பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து ்திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.
ரோகினி: தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.
மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: முடிந்தால் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும். கோளறு திருப்பதிகத்தை அன்றாடம் பாராயணம் செய்வது. தாமரை மலரை பெருமாளுக்கு சாத்திவர பொருளாதார நிலைமை உயரும்.
மிதுனம் இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.
திருவாதிரை: உங்கள் வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.
புனர்பூசம் - 1, 2, 3 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள். முடிந்தவர்கள் பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள், அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார்.
கடகம் இதுவரை உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
புனர்பூசம் 4ம் பாதம்: பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும்.
பூசம்: குடும்பத்தில் தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.
ஆயில்யம்: பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும்.
பரிகாரம்: முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும். தினசரி 108 முறையாவது "ராம' நாமத்தை ஜெபிக்கவும். “சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும். மல்லிகை மலரை சிவனுக்கு பிரதோஷ வேளையில் சாத்திவர குழப்பங்கள் அகலும்.
சிம்மம் இதுவரை உங்களது களத்திர ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
மகம்: உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.
பூரம்: பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.
உத்திரம் 1ம் பாதம்: பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கவனம் தேவை. கெட்டகனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும். திரியம்பகம் என்று ஆரம்பிக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும். வில்வ இலைகளை சிவனுக்கு சாத்திவர தீமைகள் அகலும்.
கன்னி இதுவரை உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி களத்திர ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ராசியையும் , பத்தாம் பார்வையால் சுகஸ்தானத்தையும் பார்க்கிறார்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வீண் செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.
அஸ்தம்: தேவையான பண உதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சித்திரை 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.
பரிகாரம்: ஸ்ரீதுர்க்கையை வழிபட்டு வரவும். முடிந்தால் புதன்கிழமைகளில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும். புருஷசூக்தம் பாராயணம் செய்யவும்.
துலாம் இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ரண ருண ரோக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
சித்திரை 3, 4 பாதங்கள்: கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி: வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண் பகை உண்டாகலாம். கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும்.
பரிகாரம்: சப்த கன்னியரை வழிபட்டு வரவும். லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணம் செய்வது நலம் தரும். எலுமிச்சை கனியைப் பிழிந்து சாறு எடுத்து அம்மனுக்கு அபிஷேகத்திற்கு படைத்துவர வாழ்வில் வசந்தம் வீசும்.
விருச்சிகம் இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார்.
மூன்றாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
விசாகம் 4ம் பாதம்: புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
அனுஷம்: குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.
கேட்டை: உடல்நலக்கோளாறு நீங்கி சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.
பரிகாரம்: முடிந்த போதெல்லாம் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமாவது துர்க்கையம்மனை வழிபடவும். நவகிரகப் பிரதட்சிணம் செய்யுங்கள்; நன்மைகள் பெருகும். ஸ்ரீதுர்கா சுக்தம் சொல்வது நன்மையைத் தரும். செம்பருத்தி மலரை அம்மனுக்கு ராகு காலத்தில் படைத்துவர மனதில் தைரியம் பளிச்சிடும்.
தனுசு இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையாக உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
மூலம்: வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.
பூராடம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணம், காசுகள் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்கப்பெறுவீர்கள்.
பரிகாரம்: முடிந்த போதெல்லாம் அல்லது வியாழக்கிழமைகளில் மட்டுமாவது குருவை வழிபடவும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்வது நன்மையைத் தரும். துளசி தளத்தை பெருமாளுக்கு வியாழன் தோறும் அர்ப்பணித்து வணங்கிவர அவரின் கிருபை கிடைக்கும்.
மகரம் இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தைரிய வீரிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள்: எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
திருவோணம்: தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.
அவிட்டம் - 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.
பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டுச் சிறப்படையுங்கள். முடிந்தவர்கள் தகுதியானவர்களிடம் தீட்சை பெற்று மந்திர ஜபம் செய்து வரவும். அபிராமி அந்தாதியில் சில பாடல்களையாவது அன்றாடம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். மேலும் ராம நாம ஜெபம் செய்வதும் நன்மையைத் தரும். “வில்வ தளத்தை” சிவனின் உச்சி குளிர அணிவித்து அர்ச்சனை செய்துவர துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.
கும்பம் இதுவரை உங்களது ராசியில் இருக்கும் சனி பகவான் விலகி தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.
சதயம்: எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும். முடிந்தால் ஒருமுறை திருநள்ளாறு சென்று வரவும். சனி அஷ்டகம் பாராயணம் செய்யலாம். எருக்கம்பூவை அருகிலிருக்கும் சிவனுக்கு அர்ப்பணித்து வரவர உங்களின் வாழ்வில் முக்கியமான காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.
மீனம் இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ராசிக்கு வருகிறார். மூன்றாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பூரட்டாதி 4ம் பாதம்: கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள். திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும்.
உத்திரட்டாதி: சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படும். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம்.
ரேவதி: வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.
பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். நவக்கிரக துதி சொல்லவும். அருகம்புல்லை எடுத்து மாலையாக கட்டி அருகிலிருக்கும் விநாயகருக்கு அர்ப்பணித்து வர அனைத்து தடையில்லாமல் நடந்தேறும்.
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. |