நடிகை கடத்தல் வழக்கில், காவ்யா மாதவனிடம் போலீஸார் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப் பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட 7 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் திலீப்பின் மனைவி, நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆடியோ வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, ஏப்ரல் 11-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். தான் சென்னையில் இருப்பதால் ஆஜராக முடியாது என்றும் 13-ம் தேதி தன் வீட்டில் வைத்து விசாரணை நடத்தலாம் என்றும் போலீஸாருக்கு தகவல் அனுப்பி இருந்தார்.
அந்த வீட்டில் ஆடியோ, வீடியோ கிளிப், சாட்சிகளின் அறிக்கைகள் உள்பட பலவற்றை புராஜக்டர் மூலம் காட்டி விசாரணை நடத்த போதுமான வசதி இல்லை என்று கூறி விசாரணை நடத்தப்படவில்லை. இந்நிலையில் விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று காவ்யா மாதவனுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
அதன்படி காவ்யா மாதவனின் ஆலுவா வீட்டில் குற்றப்பிரிவு போலீஸார் இன்று விசாரணை நடத்தினர். 12 மணிக்கு தொடங்கிய விசாரணை, 4.40 மணிக்கு நிறைவடைந்தது. அவரிடம் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டதாகத் தெரிகிறது. அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தாரா என்பது குறித்து போலீஸார் ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த விசாரணையை எஸ்.பி. மோகனச்சந்திரன், டி.எஸ்.பி பைஜூ பவுலோஸ் உள்பட குற்றப்பிரிவு போலீஸ் குழுவினர் மேற்கொண்டனர்.