அமெரிக்காவுடன் எந்த வகை போருக்கும் தயார் என சீனா அறிவிப்பு: ட்ரம்பின் வரிவிதிப்பால் வெடித்த மோதல்!

By KU BUREAU

பெய்ஜிங்: ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட நாங்கள் தயார் என சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஃபெண்டானில் விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, மற்றவரை சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் ஆலோசனை நடத்துவதே. ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட நாங்கள் தயார்" என்று தெரிவித்துள்ளது.

ஃபெண்டானில் விவாகரத்தைக் காரணம் காட்டி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சீன பொருள்களுக்கு ஏற்கனவே அறிவித்திருந்த 10 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீதம் வரியை செவ்வாய்க்கிழமை அறிவித்து அமல்படுத்தியது. இந்த புதிய கூடுதல் வரி விதிப்பு, கனடா, மெக்சிகோ பொருள்களுக்கான 25 சதவீத வரி விதிப்புடன் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்கான எதிர் நடவடிக்கையாக, சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பல்வேறு விவசாய பொருள்களுக்கு சீனா பதில் நடவடிக்கையாக கூடுதல் வரி விதித்துள்ளது. அதன்படி, சோயாபீன்ஸ், சோளம், பால் பொருள்கள் மற்றும் மாட்டிறைச்சி போன்ற பொருள்களுக்கு10 சதவீதம் முதல் 15 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக சீன நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஏற்றுமதி செய்யும், சோயாபீன்ஸ், சோளம், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, கடல் வாழ் பொருள்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருள்கள் போன்றவை சீனாவின் 10 சதவீத கூடுதல் வரி வித்திப்பில் அடங்கும். அதேபோல், கோழி, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக சீன நிதியமைச்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் 25 ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களுக்கும் சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE