நியூயார்க்: அமெரிக்கவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்திய, சீன, இலங்கையர்கள் உட்பட 300 பேர்கள் பனாமா நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து உதவி கேட்டு கெஞ்சும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளில் 78 முக்கிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடுகடத்த உத்தரவிட்டார்.
இதன்படி அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக மெக்ஸிகோ நாட்டினர் ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 28 லட்சம் பேரும், சீனாவை சேர்ந்த 22 லட்சம் பேரும், பிலிப்பைன்ஸை சேர்ந்த 14 லட்சம் பேரும், எல் சல்வடாரை சேர்ந்த 14 லட்சம் பேரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.
முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உடனடியாக அவரவர் நாடுகளுக்கு அனுப்பட்டு வருகிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் கைகள், கால்களில் சங்கிலியுடன் நாடுகடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்த இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 நபர்கள் பனாமா நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பனாமா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி, ஹோட்டல் கண்ணாடிக்கு அருகே பதாகைகளை வைத்து சைகை காட்டி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
அவர்கள் அனைவரும் உதவி கேட்டு அழுது புலம்பியடி இருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் விரைவில் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.