அமெரிக்காவில் அடுத்த அதிர்ச்சி: லாஸ் ஏஞ்சல்ஸில் பலத்த காற்றால் வேகமெடுக்கும் காட்டுத் தீ!

By KU BUREAU

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ குடியிருப்பு பகுதிகளிலும் பரவி தொடர்ந்து அணைக்க முடியாமல் எரிந்து வரும் நிலையில் தற்போது பலத்த காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பேரழிவை எதிர்நோக்கி பதற்றத்தில் இருக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸ்.

லாஸ் ஏஞ்சல்ஸில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து அவசர ஏற்படுகளும் தயாராக உள்ளன என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 23 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதுகுறித்து தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ் டுன் கூறும்போது, ”லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கோடீஸ்வரர்கள் தற்போது தங்களது சொத்துகளை பாதுகாக்க தனியார் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். தனியார் தீயணைப்புப் படையினர் 24 மணி நேரமும் அங்கு நின்று, கட்டிடங்களை தீப்பிழம்புகள் அணுகும் போது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கின்றனர்.

இதனால் அந்தக் கட்டிடங்கள் தண்ணீரால் நனைந்து விடுகின்றன. இதனால் அந்த சொகுசு வீடுகள் மீது தீ பரவாமல் தடுக்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தற்போது இதுபோன்ற தனியார் தீயணைப்புப் படையினரைத்தான் ஏற்பாடு செய்துள்ளனர்' என்றார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த 8 மாதங்களாக வறட்சி நிலவியது. இந்நிலையில், அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் காட்டுத் தீ 4 நாட்களில் மளமளவென பரவி 40,000 ஏக்கர் அளவுக்கு பரவியது. தண்ணீர் மற்றும் ரசாயனங்களை எடுத்துச் சென்ற தீயணைப்பு விமானங்களும், சூறாவளி காற்றின் காரணமாக காட்டுத் தீ பரவிய பகுதிக்குள் செல்ல முடியவில்லை.

தீயணைப்புத் துறையின் 7,500 வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் உள்ளூர்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய்களில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீரை, நீண்ட நேரம் பயன்படுத்தி காட்டுத் தீயை அணைக்க முயன்றனர். இவர்களால் ஓரளவுக்குத்தான் காட்டுத் தீயை அணைக்க முடிந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE