அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 100-வது வயதில் காலமானார்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

By KU BUREAU

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் தனது 100-வது வயதில் ஜார்ஜியாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலமானார்.

அமெரிக்காவின் 39-வது அதிபராக 1977 முதல் 1981 வரை பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவர் தனது பதவிக் காலத்துக்கு பிறகு மற்ற அமெரிக்க அதிபர்களை விட நீண்ட காலம் வாழ்ந்தார். கடந்த 2002-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளார். ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட ஜிம்மி கார்ட்டர், சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக அயராது உழைத்தார். இந்தியா - அமெரிக்கா உறவு வலுவடைவதற்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அமெரிக்க மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டர் பெயரில் இந்திய கிராமம்: இந்தியாவில் அவசர நிலை மற்றும் ஜனதா கட்சியின் வெற்றிக்கு பிறகு முதல் அமெரிக்க தலைவராக ஜிம்மி கார்ட்டர் 1978-ல் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார் 1978-ல் ஜனவரி 2-ல் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மறுநாள், ஜிம்மி கார்ட்டர் தனது பயணத்தின் ஒரு பகுதியாக தனது மனைவி ரோசலின் உடன் ஹரியானாவில் உள்ள தவுலத்பூர் நசிராபாத் கிராமத்துக்கு சென்றார்.

உலக அளவில் அமைதி, வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கார்டரின் அர்ப்பணிப்பின் அடையாளமாக இந்த பயணம் அமைந்தது. அவரது பயணம் மற்றும் தங்கள் மீதான அவரது கவனத்தால் நெகிழ்ந்த கிராம மக்கள், அவரது நினைவாக தங்கள் கிராமத்துக்கு 'கார்டர்புரி' என்று மறுபெயரிட முடிவு செய்தனர். ஜம்மி கார்ட்டர் பதவியில் இருந்த காலம் முழுவதும் வெள்ளை மாளிகையும் கிராம மக்கள் தொடர்பில் இருந்தனர்.

கார்ட்டர்புரிக்கு தொலைக்காட்சி பெட்டியும் பள்ளிக்கு ஆய்வக சாதனங்களையும் கார்ட்டர் நன்கொடையாக வழங்கினார். தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு கார்ட்டரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஜனவரி 3-ம் தேதியை உள்ளூர் விடுமுறை நாளாக கிராம மக்கள் அறிவித்தனர். 2002-ல் கார்ட்டருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அதனை கிராம மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE