வாஷிங்டன்: அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்பிஐ) இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் படேலை, அதிபராக பதவியேற்க உள்ள ட்ரம்ப் நியமித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் வரும் ஜனவரியில் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், புதிய அமைச்சர்கள், முக்கிய அமைப்புகளின் இயக்குநர்களை அவர் இப்போதே நியமனம் செய்து வருகிறார்.
இந்த வரிசையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் படேலை ட்ரம்ப் நியமித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: எஃப்பிஐ அமைப்பின் அடுத்த இயக்குநராக காஷ்யப் படேல் பணியாற்றுவார். அவர் சிறந்த வழக்கறிஞர், புலனாய்வு துறை நிபுணர். அமெரிக்காவுக்கு முதலிடம் அளிக்கும் போராளி. ஊழல் விவகாரங்களை வெளிக்கொண்டுவர வாழ்நாள் முழுவ
தும் போராடி வருகிறார். அமெரிக்க மக்களின் நீதியை நிலைநாட்ட உறுதியுடன் செயல்படுகிறார். ரஷ்யாவின் சதிகளை அம்பலப்படுத்தி, அமெரிக்காவின் நலன்களை காத்துள்ளார்.
அவர் பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய கும்பல்களின்சமூகவிரோத செயல்கள், எல்லையில் நடைபெறும் ஆள்கடத்தல் ஆகியவற்றை தடுக்க எஃப்பிஐ முழுவீச்சில் பணியாற்றும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
» விழுப்புரம், புதுச்சேரியை புரட்டிப் போட்ட கனமழை: மயிலத்தில் 51 செ.மீ. கொட்டியது
» சம்பல் மசூதி நிர்வாகத்தை ஒப்படைக்க கோரி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை மனு
காஷ்யப் படேல், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது முன்னோர், குஜராத் மாநிலம் வடோதரா பகுதியை சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 1980 பிப்ரவரியில் காஷ்யப் படேல் பிறந்தார். அரசு வழக்கறிஞராக பணியை தொடங்கியவர், நீதித் துறை அட்டர்னி, அமெரிக்க அரசின் தீவிரவாத தடுப்பு பிரிவு மூத்த ஆலோசகர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டன் பைடன் தொடர்பான பல்வேறு ரகசியங்களை இவர் அம்பலப்படுத்தியதால், ஜனநாயக கட்சி தலைவர்கள், இவர் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்களது எதிர்ப்பால், அரசு பொறுப்புகளில் இருந்து விலகினார். எஃப்பிஐ இயக்குநராக கடந்த 2017-ல் ட்ரம்பால் நியமிக்கப்பட்ட கிறிஸ்டோபரின் பதவிக் காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ளது. இந்த நிலையில், புதிய இயக்குராக காஷ்யப் படேலை ட்ரம்ப் நியமித்துள்ளதால், கிறிஸ்டோபர் விரைவில் ராஜினாமா செய்வார் என தெரிகிறது. ட்ரம்புக்காக எதையும் செய்யக்கூடியவர் காஷ்யப் என்று அமெரிக்க ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன.