நைஜீரியாவில் உள்ள ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர். நைஜீரியா நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள நைஜர் ஆற்றில் நேற்று முன்தினம் பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு சென்று கொண்டிருந்தது.
இந்தப் படகு கோகி மாகாணத்தின் டாம்போ பகுதியில் இருந்து அண்டை மாகாணமான நைஜர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதையடுத்து அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். சமப்வம் அறிந்ததும், மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலர் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். அதே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மாயமானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விசாரணையில், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாகாண அவசரகால நிர்வாகக் குழுவைச் சேர்ந்த அதிகாரி சான்ட்ரா முசா கூறும்போது, “படகில் எத்தன பேர் இருந்தனர் என்று தெரியவில்லை. இதுவரை 27 சடலங்களை மீட்டுள்ளோம். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. படகு கவிழ்ந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை" என்றார்
» சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
» ஃபெஞ்சல் புயல் எப்போது முழுமையாக கரையை கடக்கும்? - வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு