விஜய் கட்சி ‘அவசர’ விளக்கம் முதல் இலங்கை பிரதமர் ஹரிணி பின்புலம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

அதிமுகவுடன் கூட்டணியா? - தவெக மறுப்பு: “மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

அண்ணாமலையுடன் சந்திப்பா? - பாஜக, தவெக விளக்கம்: இதற்கிடையில், அரசியல் மேற்படிப்பு படிக்க லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, லண்டன் சென்று விஜய் ரகசியமாக சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியானது. இது குறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறுகையில், “லண்டனில் அண்ணாமலை - விஜய் சந்திப்பு என்பது பொய்யான தகவல். அதுமாதிரி எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. அண்ணாமலை படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அவர் யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சியின் தலைவர் விஜய் தெளிவாக விளக்கி உள்ளார். எங்களுடைய தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருக்கும். தனது கடைசி திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய், அண்ணாமலையை சந்தித்ததாக வெளியாகும் தகவல் தவறானது. கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் கட்சிகளுடன் பேசி விஜய் முடிவு செய்வார்” என்றனர்.

விஜய் அணுகுமுறை: அதிமுக விமர்சனம்: “நடிகர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அவரது ரசிகர்கள் தொண்டர்களாக மாற வேண்டும். மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நீண்ட தூரம் அவர், அரசியலில் பயணிக்க வேண்டும். அப்போதுதான், அரசியல் ரீதியாக தலைவர் என்ற அங்கீகாரத்தை பெற முடியும். மக்களையும், அரசியல் கட்சிகளையும் திசை திருப்பும் நோக்கத்தில் ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்லியிருக்கலாம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

50% வரிப் பகிர்வு: நிதிக்குழுவிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்: மத்திய அரசு 16-வது நிதி ஆணையத்தை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்துள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்த குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தனர். திங்கள்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50% உயர்த்தப்படுவதுதான் முறையானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும். இவ்வாறு 50% பங்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் தங்களுடைய தேவைகளுக்கேற்ப வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட இயலும். எனவே,மாநில அரசுகளுக்கான 50% வரிப்பகிர்வை இந்த நிதிக்குழு உறுதி செய்திடும் என நம்புகிறேன் என்று கூறினார்.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் வன்முறை: என்ஐஏ விசாரணை: மணிப்பூரில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை, உயிர் இழப்புகள், பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த முக்கிய வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனிடையே, மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, பாஜக கூட்டணி அரசில் இருந்து என்பிபி கட்சி விலகியது. என்பிபி கட்சியில் 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். மணிப்பூர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவுக்கு 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜக அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

பாஜகவில் கைலாஷ் கெலாட் ஐக்கியம்: டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை திடீரென ராஜினாமா செய்த நிலையில், திங்கள்கிழமை அவர் பாஜகவில் இணைந்தார். டெல்லி பாஜக அலுவலகத்துக்கு வந்த அவர், மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். பூங்கொத்து கொடுத்து அவர் வரவேற்கப்பட்டார். இதனையடுத்து, மனோகர் லால் கட்டார் அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கைலாஷ் கெலாட், ‘அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தந்த அழுத்தத்தில் இது நடந்தது என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஆனால் அது தவறு’ என்று கூறினார்.

இதனிடையே, கைலாஷ் கெலாட் ஒரு சுதந்திரமான மனிதர். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி காற்று மாசு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: டெல்லியின் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், இன்று முதல் GRAP-இன் 4-ம் கட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் தேசிய தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அப்போது, ‘காற்றின் தரக் குறியீடு 300 மற்றும் 400-க்கு இடையில் உள்ளபோது நிலை 4 செயல்படுத்தப்பட வேண்டும். GRAP-இன் நிலை 4-ஐ பயன்படுத்துவதைத் தாமதப்படுத்துவதன் மூலம் இந்த விஷயங்களில் நீங்கள் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், ‘மாசு அளவு அபாயகரமாக அதிகரித்து வருவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. காற்று தரக் குறியீடு 450-க்குக் கீழே சென்றாலும், 4-ஆம் கட்டத்தின் கீழ் தடுப்பு நடவடிக்கைகளைக் குறைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீதிமன்ற அனுமதி இல்லாமல் GRAP-4 தடைகளை தளர்த்த வேண்டாம்’ என உத்தரவிட்டுள்ளனர்.

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் தலைமையில், திருச்செந்தூர் வனசரக அலுவலர் கவின் உள்ளிட்ட வனத்துறையினர், டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், பொன்ராஜ், அருண் உள்ளிட்ட கால்நடை மருத்துவ குழுவினர் அங்கு வந்து யானையை பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு: இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சரவையில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். ஹரிணி அமரசூரிய கடந்த 1970-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி கொழும்பில் பிறந்தார். அங்குள்ள பிஷப் கல்லூரியில் அடிப்படை கல்வியை நிறைவு செய்தார். பின்னர் டெல்லி இந்து கல்லூரியில் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவின் மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் பிரிட்டனின் எடின்பர்க் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்தின் குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இதன்பிறகு இலங்கை திரும்பிய ஹரிணி இலங்கை திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றினார்.

அரசியல் ஆர்வம் காரணமாக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியில் இணைந்த அவர் கடந்த 2011-ம் ஆண்டில் அப்போதைய ராஜபக்ச அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். கடந்த 2020-ம் ஆண்டில் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் எம்பியாக பதவியேற்றார். கடந்த செப்டம்பரில் இடைக்கால பிரதமராகவும் தற்போது நிரந்தர பிரதமராகவும் ஹரிணி பதவியேற்று உள்ளார்.

இதனிடையே, இலங்கையின் புதிய அமைச்சரவையில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி மகளிர் நலத் துறை அமைச்சராக மாத்தறையை சேர்ந்த சரோஜா சாவித்திரி போல்ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல கடல் வளத் துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழ் மொழியில் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

திமுக அரசு மீது சீமான் சாடல் - “ஆட்சியாளர் தன்னுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும், மக்களும், ஏடும் போற்ற வேண்டும். இந்த தலைவனின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் முதல்வரை பார்க்க வருவதில்லை. வரவழைக்கப்படுகின்றனர்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE