கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையை அந்த நாட்டின் அதிபர் அனுர குமார திசாநாயக்க நாளை நியமிக்க உள்ளார்.
கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இதுதொடர்பாக என்பிபி கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் டில்வின் சில்வா கொழும்பில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது: இலங்கையின் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையை அதிபர் அனுர குமார திசாநாயக்க நவம்பர் 18-ம் தேதி நியமிப்பார். புதிய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 30-க்குள் இருக்கும். இணை அமைச்சர்களின் எண்ணிக்கை 40-க்குள் இருக்கும்.
மக்களின் வரிப்பணத்தை சிக்கனமாக செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே அமைச்சர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். மிக முக்கிய துறைகளில் மட்டும் கூடுதலாக இணை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு டில்வின் சில்வா தெரிவித்தார். 21-ல் நாடாளுமன்ற கூட்டம் இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 21-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் நாளில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
» இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1,440 பழங்கால பொருட்களை ஒப்படைத்தது அமெரிக்கா
» 1,500 கிலோ எடையுள்ள எருமை விலை ரூ.23 கோடி: தினமும் 20 முட்டை, உலர் பழங்கள்தான் உணவு
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் என்பிபி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா கொழும்பில் நேற்று முன்தினம் அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
விரைவில் இந்தியா பயணம்: கடந்த செப்டம்பரில் அதிபராக பதவியேற்ற திசாநாயக்க இதுவரை வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. அவர் விரைவில் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.