பியாங்யாங்: தற்கொலை தாக்குதலுக்காக ஆளில்லா ட்ரோன்களை உடனடியாக முழு அளவில் உற்பத்தி செய்ய வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உத்தரவிட்டார். மேலும், அவர் ட்ரோன்கள் சோதனையையும் மேற்பார்வையிட்டார்.
கொரிய மத்திய செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, ட்ரோன்கள், ஆளின்றி சென்று தாக்கும் முக்கிய ஆயுதங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ட்ரோன்கள் பல்வேறு வழிகளில் பறந்து, இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கிம் ஜாங் உன் தெரிவித்ததாக வெளியான தகவல்களின்படி, “அனைத்து அளவிலான போர்களிலும் ட்ரோன்கள் பெற்ற வெற்றியை இராணுவ அதிகாரிகள் அறிந்திருக்கலாம். அதனால்தான் அவற்றின் பயன்பாட்டிற்கான போட்டி உலகளவில் தீவிரமடைந்து வருகிறது. பெரிய மற்றும் சிறிய மோதல்களில் ட்ரோன்கள் தெளிவான வெற்றிகளை அடைகின்றன என்பதை உலகில் உள்ள இராணுவ அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ட்ரோன்கள் இப்போதெல்லாம் இராணுவத்தில் இன்றியமையாத தேவையாக உருவெடுத்துள்ளது" என்று அவர் கூறினார்.
இதனையடுத்து ஆளில்லா வான்வழி தொழில்நுட்ப நிறுவனத்தில் பல வகையான தற்கொலை தாக்குதல் ட்ரோன்கள் உற்பத்தியை அதிகபடுத்தியுள்ளார் கிம் ஜாங் உன். மேலும், ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் தயாரிப்பில் தொடர்புடைய அதிகாரிகளுடன் கிம் உரையாடுவதைக் காட்டும் படங்கள் வெளியிடப்பட்டன.
» அபாயகரமாக தொங்கும் மின் வயர்கள் - சென்னை ஆட்டோ ஓட்டுநர் ‘நூதன’ பிரச்சாரம்
» சென்னை - அண்ணா ஆர்ச் மேம்பாலத்தில் விரிசல், பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
தற்கொலை ட்ரோன்கள் உலகம் முழுவதிலும், குறிப்பாக உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நடக்கும் மோதல்களில், முக்கிய பங்காற்றி வருகின்றன. தரையிலும் கடலிலும் உள்ள எந்தவொரு எதிரி இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் பணியை ஆளில்லா ட்ரோன்கள் செய்கின்றன. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் வடகொரிய நாட்டின் தற்கொலை தாக்குதல் ட்ரோன்களின் சோதனையை மேற்பார்வையிட்ட கிம் ஜாங் உன், ட்ரோன் பயன்பாட்டை அதிகப்படுத்த ஊக்குவித்தார்.