ட்ரம்ப் வெற்றி உரை முதல் மோடியின் எதிர்பார்ப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 

By KU BUREAU

‘அமெரிக்காவின் பொற்காலம்’ - ட்ரம்ப் வெற்றி உரை: அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ என்றும் வாக்காளர் குழு நடைமுறை பின்பற்றப்படுகிறது. மொத்தமுள்ள 50 மாகாணங்களின் 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்களில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில், இந்த வெற்றி இலக்கை டொனால்ட் ட்ரம்ப் எளிதில் அடைந்தார்.

புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் வெற்றி உரை நிகழ்த்திய அவர், “இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும். உலகத்தின் மிக முக்கிய பணி இது. அதன் காரணமாகத்தான் இறைவன் எனது உயிரை காத்தார் என நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார். அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 6 பேரும் கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் நூலகம், அறிவியல் மையம்: தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், கோவை காந்திபுரத்தில் உள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. இவ்விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின், “சென்னையில் அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் உள்ளது போல கோவையில் இந்த பெரியார் நூலகம் உருவாகவுள்ளது. இதன் திறப்பு விழா ஜனவரி, 2026-ல் நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.

“போக்குவரத்துத் துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை” - "போக்குவரத்துத் துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது. அதில் லாப நோக்கம் இல்லை” என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

“திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை விமர்சிக்காதீர்!” - இபிஎஸ்: திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமலுக்கு வருகிறது: தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த, ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவையில் புதிய திட்டங்கள் - முதல்வர் அறிவிப்பு: கோவை மாநகரில் சாலைகளை மேம்படுத்திட ரூ.200 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும், அவிநாசி சாலை மேம்பாலம் மேலும் 5 கிலோ மீட்டருக்கு நீட்டிப்பு, கோவை டைடல் பார்க் அருகிலேயே 17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை: தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பேரவையில் சிறப்பு அந்தஸ்து குறித்து தீர்மானம்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு, ‘சட்டப்பேரவை தன் கடமையைச் செய்துள்ளது’ என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த சில மாதங்களில் நம்பிக்கை இழந்துவிட்டேன். இதனால் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரை அப்பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளேன்” என்று கூறப்பட்டுள்ளது. இது இஸ்ரேல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நண்பர் ட்ரம்ப்புக்கு... - பிரதமர் மோடி வாழ்த்துடன் எதிர்பார்ப்பு: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பர் டொனால்ட் ட்ரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்களது முந்தைய பதவிக்காலத்தின் சிறப்புகளை நீங்கள் மீண்டும் செயல்படுத்தும்போது, இந்தியா - அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நான் எதிர்பார்க்கிறேன். நமது மக்களின் முன்னேற்றத்துக்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கண்டனம்: சென்னை: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE