வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கிறது. இதில், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் ட்ரம்ப் - ஜனநாயக கட்சி வேட்பாளரான தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே பலப்பரீட்சை நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மிகப்பெரிய ஜனநாயக நாடு, வல்லரசு நாடு என்பதால் இத்தேர்தல் உலகம் முழுவதும் பெரிதும் கவனிக்கப்படுகிறது. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 5-ம் தேதி (இந்திய நேரப்படி நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் ஓராண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
ஆனால், முதுமை காரணமாக அதிபர் ஜோ பைடனால் தீவிர பிரச்சாரம் செய்ய முடியவில்லை. நேரடி விவாதங்களில் ஞாபக மறதியால் தடுமாறினார். கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்ததால், கடந்த ஜூலை இறுதியில் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் (60), அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப் அரசியல் நாகரிக வரம்புகளை அப்பட்டமாக மீறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாவின் பெயரை மோசமாக விமர்சித்தார். இதெல்லாம் ஒரு பெயரா? அவர் இந்தியரா, ஆப்பிரிக்கரா? என்று கிண்டல் செய்தார். கமலாவின் கணவர் டக்ளஸையும் விமர்சித்தார்.
ஆரம்ப காலத்தில் ஓட்டலில் வேலை செய்ததாக கமலா கூறியிருந்த நிலையில், அதையும் ட்ரம்ப்கிண்டல் செய்தார். ஓட்டலில் சர்வர்போல நடித்து, ஒரு இந்தியருக்கு உணவு வகைகளை சப்ளை செய்து தரக்குறைவான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ‘‘மூளை இல்லாதவர், சோம்பேறி. அமெரிக்க அதிபர் ஆக தகுதியற்றவர்’’ என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அதோடு, வெள்ளை இனவாதத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார்.
அவருக்கு சவால் விடுக்கும் வகையில், கமலா ஹாரிஸும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ‘‘முன்னாள் அதிபர் ட்ரம்ப் சர்வாதிகாரி, நாஜி சிந்தனை கொண்டவர், மனித உரிமைகளை மீறுபவர், பெண் உரிமைகளை மதிக்காதவர், பலவீனமானவர்” என்று கமலா குற்றம்சாட்டி வருகிறார். மேலும், பொருளாதார வளர்ச்சி, வரி சீர்திருத்தம், கருக்கலைப்புக்கு ஆதரவு, எல்லை பாதுகாப்புக்கு முன்னுரிமை, உக்ரைனுக்கு ஆதரவு, இஸ்ரேல் - காசா பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகள் கொள்கை, முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடு விரிவாக்கம், குற்றங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கமலா பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். இவை அவருக்கான ஆதரவை பெருகச் செய்துள்ளது.
பிரச்சாரத்துக்காக இதுவரை கமலா சார்பில் ரூ.6,640 கோடியும், ட்ரம்ப் சார்பில் ரூ.3,000 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் 27 மாகாணங்களில் குடியரசு கட்சியும், 23 மாகாணங்களில் ஜனநாயக கட்சியும் ஆட்சி நடத்தி வருகின்றன. அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன்,
நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதிபர் தேர்தலின்போது இந்த 7 மாகாணங்களின் மக்கள் ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயககட்சிக்கும் ஆதரவாக வாக்களிக்கின்றனர். இதனால், அதிபர் தேர்தலில் இந்த 7 மாகாணங்களின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பொதுமக்களின் வாக்களிப்பை தொடர்ந்து, தேர்வர்கள் குழு (Electoral College) தேர்தல் டிசம்பரில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 2025 ஜனவரி 6-ம் தேதி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர் ஜனவரி 20-ம் தேதி அதிபராக பதவியேற்பார்.
கணிப்புகள் பலிக்குமா? கடந்த அக்டோபரில் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கமலாவுக்கு 44 சதவீதம் பேரும், ட்ரம்புக்கு 43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். கடந்த 1-ம் தேதி ‘குக் பொலிடிக்கல் ரிப்போர்ட்’ வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 48.6%, ட்ரம்புக்கு 47.7% ஆதரவு கிடைத்துள்ளது. 2-ம் தேதி ‘தி ஹில்’ நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், கமலாவுக்கு 48.1%, ட்ரம்புக்கு 48.3% வாக்குகள் கிடைத்தன. அதே நாளில் ‘538’ என்ற அமைப்பு வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 47.9%, ட்ரம்புக்கு 46.9% வாக்குகள் கிடைத்தன. இவை உட்பட புதிதாக வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.