ஸ்பெயின் கனமழை - வெள்ளம்: 158 பேர் உயிரிழப்பு: ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக 158 பேர் உயிரிழந்தனர். கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு வரலாறு காணாத மழை சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் அவலநிலை அங்கு நிலவுகிறது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கைப் பேரிடர் பாதிப்புகளில் இது ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு வலேன்சியாவின் வீதிகளில் சாய்ந்த மின் கம்பங்கள், வேரோடு சாய்ந்த மரங்கள், சேரும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றான மீது ஒன்றாக நிற்கும் கார்கள் என்ற சூழல் நிலவுகிறது. அங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மின்சாரம், உணவு போன்ற அடிப்படை தேவைகளும் முறையாக கிடைக்கப்பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வெள்ளத்தால் எண்ணில் அடங்கா மக்கள் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 40 ஆயிரம் மக்கள் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர். வலேன்சியாவில் மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை சேவைகளை மீட்டெடுக்கவே மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறிவதே எங்களது முதல் பணி. அதன் மூலம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு நாங்கள் உதவ முடியும் என நம்புகிறோம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாள் - தலைவர்கள் வாழ்த்து: சென்னை மாகாணம் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழக மாநிலமாக உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு நாளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்தனர்.
» தீபாவளியன்று கோவையில் பட்டாசு வெடித்ததில் மிதமான காற்று மாசு!
» கோவை மாநகரில் குவிந்த 75 டன் பட்டாசுக் கழிவுகள் - அகற்றும் பணி தீவிரம்
ரயில் டிக்கெட் முன்பதிவு: புதிய கால வரம்பு அமல்: ரயில் பயண டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நடைமுறை நவம்பர் 1-ம் தேதியான வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும், ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெருநகரங்களில் அதிகரித்த காற்று மாசு: டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடையை மீறியும் மக்கள் பட்டாசு வெடித்ததால், வெள்ளிக்கிழமை காலை தலைநகரில் காற்று மாசு அதிகரித்தது, நகரம் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 350 ஆக இருந்தது. பெரும்பாலான இடங்களி காற்றின் தரம் மிகவும் மோசம் என்றநிலையில் இருந்தது. தலைநகர் டெல்லியைப் போலவே மற்ற மெட்ரோ நகரங்களான மும்பை மற்றும் சென்னையிலும் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தது. பல்வேறு இடங்களில் புகைமூட்டங்கள் காணப்பட்டன.
பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் மறைவு: பிரபல பொருளாதார நிபுணரும், பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதர ஆலோசனைக் குழுவின் தலைவருமான பிபேக் டெப்ராய் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 69. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்தி மோடி, “பிபேக் டெப்ராய் ஒரு சிறந்த அறிஞர். பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார்” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் ரோந்துப் பணி தொடக்கம்: “இந்திய மற்றும் சீன ராணுவங்களின் ஒருங்கிணைந்த ரோந்துப் பணி கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் தொடங்கியுள்ளது. டெப்சாங் பகுதியிலும் ரோந்து பணி விரைவில் தொடங்கும். இவ்விரு பகுதிகளிலும் குவிக்கப்பட்டிருந்த இரு நாட்டு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று ராணுவம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“இந்துக்களை புறக்கணித்து விட்டனர்” - ட்ரம்ப்: கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை நிராகரித்து விட்டனர். எனது நிர்வாகத்தின் கீழ், இந்தியாவுடனும் எனது நல்ல நண்பருமான பிரதமர் மோடியுடனான நமது சிறந்த கூட்டாண்மையையும் வலுப்படுத்துவோம் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பட்டாசு வெடித்ததில் 544 பேருக்கு காயம்: தமிழகத்தில் பட்டாசு வெடித்ததால் 150 இடங்களில் தீ விபத்தும் 544 பேருக்கு தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி: டாஸ்மாக் மது விற்பனை ரூ.438.53 கோடி: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.438.53 கோடிக்கு மது விற்பனையானதாகவும், இது கடந்த ஆண்டைவிட ரூ.29 கோடி குறைவு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் 156.48 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: சென்னையில் தீபாவளி பண்டிகை தினமான அக்.31-ம் தேதி மதியம் முதல் வெள்ளிக்கிழமை மதியம் பகல் 12 மணி வரையில், 156.48 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.