இந்தியாவைத் தொடர்ந்து சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இணைய பிரேசில் மறுப்பு

By KU BUREAU

பிரேசிலியா: இந்தியாவைத் தொடர்ந்து சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேட்டிவ் (பிஆர்ஐ) திட்டத்தில் இணைய பிரேசில் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் செல்சோ அமோரிம் கூறியதாக பிரேசில் செய்தித்தாள் ஓ குலோபோ வெளியிட்டுள்ளசெய்தியில் கூறியுள்ளதாவது: பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையிலான பிரேசில், சீனாவின் பிஆர்ஐ திட்டத்தில் சேராது. அதற்கு பதிலாக சீன முதலீட்டாளர்களுடன் ஒத்துழைக்க மாற்று வழிகளை பிரேசில் தேடும்.

பிஆர்ஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், சீனாவுடனான உறவை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல பிரேசில் விரும்புகிறது. சீனர்கள் இதை ‘பெல்ட் அண்ட் ரோடு’ என்று அழைக்கின்றனர். அவர்கள் விரும்பும் பெயர்களை அவர்கள் கொடுக்கலாம். ஆனால், பிரேசிலுக்கு என்று சில முன்னுரிமை திட்டங்கள் உள்ளன. அவை சீனாவால் ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக வரும் நவம்பர் 20-ம் தேதி பிரேசில் செல்ல உள்ளார். பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் பிரேசிலை இணைக்கச் செய்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிரேசில் தனது முடிவை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் இணையஏற்கெனவே இந்தியா மறுத்திருந்தது. இந்நிலையில் பிரேசிலும் இந்தத் திட்டத்தில் இணைய மறுப்புத் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இணைய மறுத்த முதல் நாடு இந்தியா. இது தொடர்பாக சீனா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் உள்ளடக்கியதால் இத்திட்டத்துக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிஆர்ஐ என்று அழைக்கப்படும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேட்டிவ் திட்டமானது சீனாவை ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை தரை மற்றும் கடல் வழியே சாலையை அமைத்து இணைப்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE